அபிநந்தன் பெற்றோருக்கு ராயல் சல்யூட்! விமானத்தில் நெகிழச் செய்த இந்தியர்கள்!

இந்திய விமானி அபிநந்தனை வரவேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற அவரது பெற்றோரை சக விமானப் பயணிகள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் இன்று பிற்பகலில் அவர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

அவரை வரவேற்க அபிநந்தனின் தந்தை ஒய்வு பெற்ற ஏர் மார்ஷல் வர்தமான், தாய் டாக்டர் ஷோபா வர்தமான் ஆகியோர் சென்னையில் இருந்து பின்னிரவு விமானம் ஒன்றில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்களுடன் விமானத்தில் பயணம் செய்யப் போவது குறித்து அறிந்த சக பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அபிநந்தனின் தாயும், தந்தையும் விமானத்தில் ஏறியது முதல் அவர்கள் இருக்கைக்குச் சென்று அமரும் வரை அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

அந்த விமானம் டெல்லியை அடைந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து அமிர்தசரஸ் புறப்பட்டுச் சென்றனர்.