இனி தலைமை ஆசிரியர்கள் இல்லை..! அவர்கள் முதல்வர்களாம்..! விசிக எம்பி ரவிக்குமார் உடைக்கும் ரகசியம்!

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டம் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.


இந்த நிலையில், மத்திய அரசின் கல்வித்திட்டம் தமிழகத்தில் நுழைந்துவிட்டதாக அதிர்ச்சி அளிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார் எம்.பி. அவர் கூறுவதைக் கேளுங்கள். அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டிருப்பதாக செய்தி வெளியாகிறது.

அப்படி ஒருங்கிணைக்கப்பட்ட பின் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ‘முதல்வர்’ என்று அழைக்கப்படுவார் எனவும், அவ்வாறு பொறுப்பு ஏற்பவரின் ஆளுகைக்குக் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணி ஒதுக்குவது, தேர்வு நடத்துவது, அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவராக அந்த ‘முதல்வர்’ இருப்பார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், சில அரசுப் பள்ளிகளில் 60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலை உள்ளதாகவும் தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாகத்தான் இந்த ‘ஆசிரியர் பகிர்மானத் திட்டத்தை’ அந்த அறிக்கை முன்வைத்துள்ளது. புதிய ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்துவதற்கு இந்தத் திட்டம் வழிசெய்கிறது. இதனால் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் 

பாதிக்கப்படுவதோடு மேல்நிலைப் பள்ளிகளும் பாதிப்புக்கு உள்ளாகும். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடிவிட்டு அவற்றை நூலகங்களாக மாற்றப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இப்போது திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கை மேலும் அரசுப்பள்ளிகளைப் பலவீனப்படுத்துவதோடு தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டுவதற்கும், பணவசதி இல்லாத மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடுவதற்கும்தான் வழிவகுக்கும். 

‘தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை’ இன்னும் விவாத நிலையிலேயே இருக்கும் சூழலில் பள்ளிகளை ஒருங்கிணைத்து ‘ பள்ளி வளாகங்களாக’ மாற்றும் அதன் யோசனையைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த முற்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பாஜக அரசின் கல்வித்திட்டத்துக்கான பரிசோதனைக்கூடமாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டிருக்கிறதா என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. பள்ளிக் கல்வியை சீரழிக்கும் இந்த முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.