ஓடும் காரை தடுத்து நிறுத்த முயற்சி! இளைஞருக்கு ஓட்டுனரால் ஏற்பட்ட விபரீதம்!

டெல்லி: சுங்கச்சாவடி ஊழியர் மீது ஒருவர் கார் ஏற்றிய சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


டெல்லி அருகே உள்ள குர்கான் சுங்கச்சாவடியில், கடந்த வியாழக்கிழமை கறுப்பு நிற செடான் கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த நபர் சுங்கக்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்போது அங்கிருந்த ஊழியர் அந்த காரை தடுக்க முயற்சிக்கவே, அவர் மீது அப்படியே காரை விட்டு ஏற்றியுள்ளார் காரில் வந்த நபர்.

இதில், சுங்கச்சாவடி ஊழியர் காரின் பானட் பகுதியில் தொங்கியபடி சில அடிகள் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர், மற்ற ஊழியர்கள் பின்னால் துரத்தி வரவே, அந்த கார் பிரேக் அடித்து நின்றுள்ளது. உடனடியாக, சுங்கச்சாவடி ஊழியர் கீழே இறங்கிவிட, அப்போது குறிப்பிட்ட காரை ஓட்டிய நபர் வளைத்து, ஒடித்து காரை ஓட்டி, தப்பிச் சென்றுவிட்டார். 

இதன்பேரில், சுங்க ஊழியர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில், அந்த காரை அடையாளம் கண்டுபிடித்து, அதனை ஓட்டி வந்தநபரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, காரின் பானட்டில் சுங்கச்சாவடி ஊழியர் தொங்கியபடி பயணிக்கும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.