தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஆம்புலன்ஸ்க்கு உதவிய சிறுவன்! கர்நாடக அரசு விருது வழங்கி கவுரவம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கர்நாடகாவின் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கால் சீரழிந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் ஹிரேரயன கும்பி கிராமத்தில் மழை, வெள்ளத்தால் தனித் தீவு போல காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் அங்கு உயிரிழந்த பெண்ணின் சடலம் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளை ஆம்புலன்ஸ் வாகனம் ஓன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு செல்ல வழி தெரியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திகைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கு கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து கேட்டபோது அங்கே ஒரு தரைப்பாலம் இருப்பதாகவும் ஆனால் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாது எனவும் சிறுவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து செய்வதறியாத திகைத்த ஓட்டுநருக்கு உதவும் வகையில் 6ம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ் அவர்களுக்கு உதவுவதாக கூறி முன்னே நடந்து சென்றான்.

தன் உயிரைப் பற்றி கவலைப்படாத வெங்கடேஷ் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வெள்ளம் கரைபுரண்டோடும் தரைப்பாலத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி சொல்லிக்கொண்டே தரைப்பாலத்தை கடக்கச் செய்தான். பின்னர் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நன்றி தெரிவித்துவிட்டு செல்லவேண்டிய இடத்திற்கு சென்றார்.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ இதை கவனித்த கர்நாடக அரசு சிறுவன் வெங்கடேஷின் துணிச்சல், தைரியம், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருணை உள்ளத்தை வெகுவாக பாராட்டியது. அது மட்டுமின்றி சுதந்திர தின விழாவில் சிறுவன் வெங்கடேஷிற்கு துணிச்சலுக்கான விருதை வழங்கி கவுரவித்தார் ராய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் .