ரூ.9 லட்சம் பேங்க் டெபாசிட்! ரூ.1.75 லட்சம் சில்லறை காசுகள்! லட்சாதிபதி பிச்சைக்காரருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் வங்கிக் கணக்கில் 8.77 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து 1.75 லட்சம் ரூபாய்க்கு சில்லறை காசு கிடைக்கப்பெற்றுள்ளது.


மும்பையின் மன்கர்ட்- கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 82 வயதான நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பிரடிசந்த் பனாரம் ஆசாத் என்ற பெயர் கொண்ட யாருடைய ஆதரவும் இல்லாததால் ரயில்வே நிலையங்களில் பிச்சை எடுத்து தன்னுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டிவந்தார்.

இவர் ரயில் பாதை அருகில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிரடிசந்த் பனாரம் ஆசாத்தின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே போலீசார், அவர் யார் என்ற விவரங்களை சேகரிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது குடிசையில் 1.75 லட்சம் ரூபாய்க்கான நாணயங்கள் கிடைக்கப் பெற்றது. பின்னர் ஒரு இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வங்கி கணக்கு இருப்பதற்கான பாஸ்புக் கிடைத்தது. மேலும் இரண்டு வங்கிகளில் சேர்த்து சுமார் ரூ.8.77 லட்சத்துக்கான வங்கி வைப்புத் தொகைக்கான ரசீது, ஆதார், பான்கார்டு ஆகியவையும் கிடைக்கப் பெற்றது.

வங்கி பாஸ்புக்கில் நாமினி என்று அவர் மகன் சுகதேவ் பெயரும் ராஜஸ்தானில் உள்ள ராம்கர் முகவரியும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சுகதேவை தொடர்புகொண்ட போலீசார் அவரது தந்தையின் உடலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்கள்.

கடைசி காலத்தில் அரவணைக்காமல் மகன் விரட்டி விட்டபோதும் தினமும் பிச்சை எடுக்கும் காசில் உணவுக்காக மட்டும் செலவழித்துவிட்டு மகனுக்காக பணம் சேர்த்து வைத்துவிட்டு மறைந்துள்ளார் மனதளவில் பணக்காரராக இருக்கும் பிரடிசந்த் பனாரம் ஆசாத் என்ற பிச்சைக்காரர்.