அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏவின் தம்பி ஸ்டாலினுடன் சந்திப்பு! திமுகவில் இணைந்து அண்ணனுக்கு சொன்ன செய்தி!

தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் நிலவரம் மிகவும் கலவரமாகத்தான் இருக்கிறது. தினமும் யாராவது ஒரு பொறுப்பாளர் வேறு கட்சிக்குப் போவதும், அந்த இடத்துக்கு வேறு ஒரு நிர்வாகியைப் போடுவதும்தான் தினகரனுக்கு இப்போதைய வேலையாக இருக்கிறது.


சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க.வில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் தி.மு.க.வில் இணைத்து, கட்சியை வலுவாக்க ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி தம்பியுமான பரணி கார்த்திகேயன் இன்று திடீரென அறிவாலத்துக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த இணைப்புக்குக் காரணம் முன்னாள் அமைச்சர் ரகுபதிதானாம்.

இந்த பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.! கட்சியில் இணைந்ததும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் பரணி கார்த்திகேயன். ‘‘நான் மட்டும்தான் இப்போது தலைவர் ஸ்டாலின் முன்பு இணைந்துள்ளேன். 

எங்கள் கட்சியில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏராளமான நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைய உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

அத்துடன் நில்லாமல், ‘‘புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அ.ம.மு.க.வில் என்ன பிரச்சினை நடக்கிறது என்பதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறுவேன். திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார்.

என்னா தினகரன், அடுத்த பட்டியலுக்குத் தயாரா இருக்கீங்களா..?