அமித்ஷாவிடம் பன்வாரிலால் கொடுத்த ஃபைல்! பீதியில் அமைச்சர்கள்!

பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி வருமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குகு நேற்று இரவு அவசர அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் விமானத்தில் டெல்லி புறப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் டெல்லி செல்ல உள்ள தகவல் முதலமைச்சர் தரப்புக்கே கடைசி நேரத்தில்தான் தெரியவந்துள்ளது.

டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்கு தமிழகம் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஆளுநரை சந்தித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலர் பேசி விட்டுச் சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை நாடாளுமன்றத்தில் சவுத் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமித்ஷாவை பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார்.

வழக்கமான நல விசாரிப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் முடிந்த பிறகு நேரடியாக தமிழக அரசியல் குறித்து தான் இருவரும் பேசியுள்ளனர். தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைய காரணம் என்ன என்பது தான் அமித் ஷா நேரடியாக ஆளுநரிடம் கேட்ட கேள்வி. அதற்கு அதிமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி தான் படு தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் திமுகவின் சிறப்பான தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி கணக்கு அவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறியதாக சொல்கிறார்கள்.

மேலும் தேர்தல் சமயத்தில் திமுகவினர் சிறப்பாக செயல்பட்டு பணத்தை கச்சிதமாக செலவழித்து வெற்றி பெற்றதாகவும் ஆனால் அதிமுக நிர்வாகிகள் பணத்தை செலவழிக்காமல் தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததாக உளவுத்துறை கொடுத்து தகவலையும் அமித்ஷாவிடம் எடுத்து வைத்துள்ளார் பன்வாரிலால் புரோஹித்.

மேலும் சமீபகாலமாக பாஜகவிற்கு நெருக்கமானவர்களை தமிழக ஆளும் கட்சி சீண்டுவதும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் தோல்விக்கு காரணம் என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசி வருவது குறித்தும் அமித்ஷா கவனத்திற்கு ஆளுநர் கொண்டு சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

இதேபோல் கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் மீது வந்துள்ள புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய சில கோப்புகளை அமித்ஷாவிடம் பன்வாரிலால் புரோஹித் கொடுத்துள்ளார். அதில் தற்போது முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் முதல் பட்டும் படாமல் இருக்கும் அமைச்சர்கள் வரை பலரது ஜாதகமே அடங்கி உள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் காலூன்ற வியூகம் வகுத்து வரும் அமித்ஷா முதலில் தாக்குதலை அதிமுக தரப்பிலிருந்து தொடங்குவாரா அல்லது திமுக தரப்பில் இருந்து தொடங்குவாரா என்பது பன்வாரிலால் கொடுத்து விட்டு திரும்பிய அந்த கோப்புகளை ஆய்வு செய்த பிறகு தான் தெரியுமாம். ஆளுநர் டெல்லி செல்கிறார் என்கிற தகவல் அறிந்ததுமே அமைச்சர்கள் பலரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். ஏனென்றால் முதலமைச்சருக்கும் டெல்லிக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில காலமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.