ஆட்டோ ஷங்கர் வாழ்க்கை சீரிஸ் பகுதி 7:தூக்கு மேடையில் ஆட்டோ சங்கர் என்ன செய்தான் தெரியுமா?

உச்ச நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்டதும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டான் சங்கர். கிறிஸ்துவ மதத்துக்கு மாறினான். அவனது குடும்பம் உதவுவதற்கு யாருமின்றிக் கெட்டு அழிந்தது. சங்கரும் எல்டினும் அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சங்கரின் மனைவியும் எல்டினின் மனைவியும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். அது நிராகரிக்கப்பட, அப்பீலுக்குப் போனார்கள். பலன் இல்லை.


1995ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி சங்கருக்குத் தூக்கு தண்டனை என்று உறுதி செய்யப்பட்டது. முதல் நாள் நள்ளிரவுவரைக்கும் அதை ரத்து செய்யப் பல விதமான முயற்சிகள் நடந்தன.

மரண நாள் பற்றிய செய்தி வந்ததுமே சங்கர் நிறைய மாறினான் என்கிறார்கள். ஒழுங்காகச் சாப்பாடுகூட எடுத்துக்கொள்ளாமல், பால் மட்டுமே எடுத்துக் கொண்டானாம். சவரம் செய்யாமல் தாடி மண்டிய முகத்துடன் திரிந்த சங்கரின் கவலை எல்லாம் அவனது மூத்த மகள் பற்றியதுதான்!

கீதாலட்சுமி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு பையனுடன் இருந்த காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வர, ஏக ரகளை நடந்திருக்கிறது. அது 'மைனர் பெண்என்று காரணம் சொல்லி போலீஸ் வரை புகார் போக, இப்போது அந்தப் பெண் சென்னையில் 'சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கிறாள். அந்தப் பெண்ணின் எதிர்காலம் பற்றித்தான் சங்கர் கவலையோடு இருந்தான்.

''ஆனது ஆச்சு... அது என்னன்னு பார்த்து நல்லபடியா முடிச்சிடறதுதான் எல்லோருக்கும் நல்லது...'' என்று தன்னைச் சிறையில் சந்திக்க வருகிற உறவினர்களிடம் சொன்னானாம் சங்கர்ஏப்ரல் 27, வியாழக்கிழமை. அதிகாலை 4 மணி... சேலம் மத்திய சிறைச்சாலைப் பகுதி முழுக்க அந்த உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தது. சுற்று வட்டார மக்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் எனப் பெரும் பட்டாளம் மத்திய சிறைச்சாலையின் வாசலில் கூட... பரபரப்பு.

இதனிடையே, ஜெயிலுக்கு உள்ளே அந்த வேளையிலும் தன் மகளுக்கும் மனைவிக்கும் நீண்டதொரு கடிதத்தை மிக சீரியஸாக எழுதி முடித்தான் சங்கர். கடைசி நிமிடங்களில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்களில் பதற்றம் துளியும் இல்லாமல் தெளிவான கையெழுத்தில் சங்கர் எழுதி இருந்தது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.  அந்தக் கடிதங்களில் தனது சொத்துகள் குறித்த சில முக்கிய யோசனைகளைத் தன் குடும்பத்தினருக்குத் தெளிவாக விளக்கி இருந்தானாம். தனது மரணத்துக்குப் பிறகு தனது சொத்துகள் கையாளப்பட வேண்டிய வழி முறைகளே அவை.

ஜெயிலுக்கு வெளியே உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆட்டோ சங்கரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறித் துடித்த காட்சி பரிதாபமானது. ஆட்டோ சங்கரின் சகோதரிகள் இருவரும், மகன்களான டெல்லி சுந்தரமும் சீனிவாசனும், கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்தனர்நேரம் ஆக ஆக, பதற்றம் அதிகரித்தது. தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் உடலை அவனது உறவினர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் குழப்பம் நிலவியது. காரணம், ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீஸ்வரி அங்கு வந்து சேரவில்லை. 6.25 மணிக்குத் தன் இளைய மகளுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார் ஜெகதீஸ்வரி. அதுவரை சற்று அமைதியாக இருந்த சங்கரின் தாயார், மீண்டும் புலம்பலை ஆரம்பித்தார்.

''எட்டு கொலை, பத்து கொலை செய்தவங்களையெல்லாம் வெளியே விட்ட பாவிகளா... என் பையனை இப்படி அநியாயமா சதி பண்ணிக் கொன்னுட்டீங்களே... நீங்க உருப்படுவீங்களா?'' என போலீஸாரைப் பார்த்து அர்ச்சிக்க ஆரம்பித்தார்''நேற்றிரவு முழுக்கத் தூங்காமல், தூக்கிலிடப்படும் அந்த மரண விநாடிகளில் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் சங்கர் மன தைரியத்துடன் இருந்தது கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுப் போனோம்!'' என்றார்கள் அதிகாரிகள் சிலர்.

'கடைசி நிமிடம்வரை தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி விடுவோம்என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். தன்னைக் காப்பாற்ற வெளியே நடக்கிற முயற்சிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தான். 26-ம் தேதி இரவு உறக்கம் இல்லாமல் விழித்து இருந்தான். ''எனக்கு ஒண்ணும் ஆவாது சார்... போன் வரும், பாருங்க...'' என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.

அதிகாலை 3 மணிக்குக் குளியலுக்கு சங்கரை போலீஸார் அழைத்துச் சென்றபோது, ''என்ன சார், சுடுதண்ணி...! பச்சைத் தண்ணிதான் நல்லா இருக்கும்...'' என்றபடி குளித்து முடித்துவிட்டு வந்தான். ஆடைகளை அணிந்து கொண்டு வரும்போதும் ''போன் வரும் சார்...'' என்று சொன்னான்.

கடைசியில் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்கிற வழியில், ''எதுனா சொல்லணுமா சங்கர்..?'' என்று அதிகாரிகள் கேட்க, ''ஒண்ணுமில்லே சார்...'' என்ற சங்கர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி, ''எனக்கு எந்த வருத்தமும் இல்லே...'' என்றானாம்தூக்கு மேடைக்கு அருகே பைபிள் படிக்கச் சொல்லி மௌனமாகக் கேட்டுவிட்டு, அங்கே இருந்த அதிகாரிகளிடம் 'நான் வரட்டுமா..?’ என்பது மாதிரி தலையை அசைத்துவிட்டுத் தூக்கு மேடையில் ஏறி நின்றான்.

சங்கரின் முகத்தில் கறுப்புத் துணி மாட்டப் பட்டது. கரங்கள் இரண்டும் பின்புறமாக இழுத்துக் கட்டப்பட்டன. எல்லாம் முடிந்து சிக்னலுக்காகக் காத்திருந்த நேரத்தில் திடீரென, ''சார், ஒரு நிமிஷம் சார்... ஒரு நிமிஷம் சார்...'' என்று கத்தினானாம் சங்கர். ஆனால், சட்ட விதிமுறைகள் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்க இடம் கொடுக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் சங்கர் இறந்து போயிருந்தான்.

சங்கர் மரணத்துடன் பல்வேறு சங்கதிகள் வெளிவராமலே புதைந்து போயின. அவன் 10க்கும் மேற்பட்ட கொலைகள் செய்திருக்கிறான் என்று சொல்லப்பட்டாலும், அதன்பிறகு விசாரணை வட்டம் விரிவடையவே இல்லை. அதேபோல், சிறையில் இருந்து சங்கரை போலீஸ்தான் தப்பவிட்டது என்றும் சொல்லப்பட்டது. ஒருசில வி.ஐ.பி.கள் குறித்த ஆதாரங்களை அழிக்க வேண்டியே போலீஸ் விட்டுப்பிடித்தது என்றும் சொல்லப்பட்டது.

இன்னும் சில காலம் ஆட்டோ சங்கர் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், அவன் செய்த கொலைகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாக எகிறியிருக்கும். இதனை கண்டுபிடித்த ஜூனியர் விகடன் நிருபர் ஆந்தை குமாருக்கும், அதன்பிறகு இந்த வழக்கை சீரியஸாக விசாரித்து எழுதி பரபரப்பாக்கிய நக்கீரன் பத்திரிகைக்கும் தமிழர்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும்.