சிறுகதை எழுதப்போறீங்களா..? மாலன் கொடுக்கும் அறிவுரை கேளுங்கள்.

இணையதளம் வந்தபிறகு, எல்லோருமே எழுத்தாளர்கள்தான். ஆனாலும், நல்ல சிறுகதை எழுத்தாளர் ஆவதற்கான வழிமுறைகளை பகிர்ந்திருக்கிறார் மாலன். இதோ, அந்த குறிப்புகள்.


1.சிறுகதைக்கு முதல்வரி முக்கியம்

2.எளிமையாக எழுதுங்கள். ஆனால் கூர்மையாக எழுதுங்கள்.

3.தேய்வழக்கைத் தவிர்த்து விடுங்கள்

4.விளம்பச் சொல்கிறோம் என மிகைப்படுத்தாதீர்கள்

5. யதார்தத்திற்கு அருகே எழுதுங்கள். அமைச்சரை அறைதல் நிஜவாழ்வில் சாத்தியமில்லை. ஆனால் தெருநாயைக் கல்லால் அடிக்க முடியும்

6.ஒவ்வொரு மனிதனுக்கும் பின் குறைந்தது ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு இடத்திற்குப் பின்னும் கதை இருக்கிறது

7.முரண்பாடுகளுக்குள்- அக, புற முரண்பாடுகளுக்குள்- கதை இருக்கிறது

8.பழந்தமிழ் இலக்கியங்களுக்குள் கதை இருக்கிறது (சங்க இலக்கிய உதாரணங்கள் தந்தேன்)

9.வடிவங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். கதையின் மையப் புள்ளியைத் தீர்மானியுங்கள். அது வடிவத்தைத் தீர்மானித்துக் கொள்ளும்.

10.மொழியைப் பயிலுங்கள். கவிதை எழுதுகிறவர்கள்-புதுக்கவிதை எழுதுகிறவர்கள் கூட- பாரதியையும் பாரதிதாசனையும் கண்ணதாசனையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். பாரதி பல வகைக்களுக்காக. பாப்பாவிற்கு எழுதிய பாரதி வேதாந்தத்தையும் எழுதினார். பாரதிதாசன் மொழிவளத்திற்காக.கண்ணதாசன் எளிமைக்கும் இனிமைக்கும்

11. இலக்கிய குழு அரசியலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதை வேடிக்கை பாருங்கள். எழுத்துக்கப்பால் எழுத்தாளர்களை மனிதர்களாக விளங்கிக் கொள்ள அது உதவும்

12.பணத்திற்காக எழுதாதீர்கள். பணம் தேவைதான். ஆனால் பாரதி சொல்வதைப் போல் பணத்திற்காக நெய்வதை விட புகழுக்காக நெய்வது மேல்

13.பாரதி சொன்ன இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று காசிப்பட்டு போல நெய்ய வேண்டும். அல்லது உழைப்பாளிக்குப் பயன்படும் கச்சைத் துணி போல் நெய்ய வேண்டும் இரண்டும் கெட்டான் மஸ்லின் நெசவு கூடாது

14.சுருக்கமாகச் சொன்னால் புதியதை எழுதுங்கள்; புதிதாய் எழுதுங்கள்