படித்தது 8! திருடுவது iPHONE! ஆப்பிள் கம்பனிக்கு சவால் விடும் ஹைடெக் திருடன்!

யாராலும் திருடி பயன்படுத்த முடியாது என்று விளம்பரம் செய்யப்படும் iPHONEகளை மட்டுமே குறி வைத்து திருடி புதிய செல்போன் போல் விற்பனை செய்து வந்த ஹைடெக் திருடன் சென்னையில் சிக்கியுள்ளான்.


சென்னை தியாகராயநகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இளைஞர்கள் பலரின் செல்போன்கள் வழிப்பறி செய்யப்பட்டன. அதிலும் ஆப்பிள் நிறுவன ஐபோன்களாக பார்த்து ஒருவன் திருடி வந்துள்ளான். ஆப்பிள் போன்களை திருடினாலும் பயன்படுத்த முடியாது. மேலும் திருடிய போனை பயன்படுத்தினாலும் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.

   எனவே ஆப்பிள் ஐ போன்களை திருடுவது யார்? அவன் எப்படி அதனை விற்பனை செய்கிறான் என்று தெரியாமல் போலீசார் விழித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் சித்தார்த் என்பவரது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள iPHONE X மாடலும் தியாகராயநகரில் வழிப்பறி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சித்தார்த் தனது செல்போன் அவ்வளவு தான் என்று கருதி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

   இந்த நிலையில் மறுநாள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சித்தார்த்திற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது iPHONE இருக்கும் இடம் தெரிந்துவிட்டது நீங்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு உங்கள் செல்போன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த லிங்கை சித்தார்த் ஓபன் செய்த போது iPHONEகளுக்கே உரித்தான மாடல் ஐடி நம்பர் கேட்டுள்ளது. இதனால் உஷாரான சித்தார்த் உடனடியாக காவல்நிலையம் சென்றுள்ளனர்.

   சித்தார்த்திற்கு குறுஞ்செய்தி வருவதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு உரியவரை சென்னை கொடுங்கையூரில் சென்று மடக்கினர் போலீசார். அந்த நபர் மென்பொருள் ஊழியர் என்பதும் ஆனால் அந்த செல்போன் எண்ணை  அவர் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி அடையாளச் சான்று கொடுத்து செல்போன் எண் வாங்கி அந்த பலே திருடன் iPHONE திருடி வந்தது தெரியவந்தது.

   இதனை அடுத்து அந்த செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார் பெரம்பூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த அப்துல் ரகுமானை கைது செய்தனர். தியாகராயநகரில் செல்போன் கடை வைத்துள்ள அப்துல் ரகுமான் ஆப்பிள் செல்போன்களை வழிப்பறி செய்து அதனை ஹேக் செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனிடம் நடைபெற்ற விசாரணையின் போது தான் யாராலும் ஹேக் செய்ய முடியாது, யாராலும் திருடி பயன்படுத்த முடியாது என்று சொல்லப்படும் ஆப்பிள் iPHONE எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.

   iPHONE ஐ திருடியதும் அந்த போனில் உள்ள சிம்கார்டை அகற்றிவிட்டு தான் போலி சான்றிதழ் கொடுத்து வாங்கி வைத்துள்ள சிம்கார்டை அப்துல் ரகுமான் போடுவாராம், உடனடியாக iPHONE உரிமையாளரின் மற்றொரு செல்போன் எண்ணுக்கு இந்த விஷயம் சென்றுவிடும். மேலும் ஆப்பிள் நிறுவனமும் செல்போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கும்.

   அந்த குறுஞ்செய்தில் உள்ள லிங்கை ஓபன் செய்து அதில் செல்போனின் மாடல் ஐடி எண்ணை உரிமையாளர் கொடுத்ததும் அப்துல் ரகுமான் உடனடியாக iPHONEஐ ரீசெட் மற்றும் பிளாஸ் செய்து முடக்கிவிடுவார். இதன் மூல அந்த iPHONEல் உள்ள அத்தனை தகவல்களும் அழிந்து புதிய போன் போல் ஆகிவிடும். இதன் பின்னர் ஐ.டி மாடல் எண்ணை மாற்றி அதனை வேறு ஒருவருக்கு அப்துல் ரகுமான் விற்பனை செய்து வந்துள்ளார்.

  வெறும் 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் iPHONE ஐயே தினது கிரிமினல் மூளை மூலம் ஹேக் செய்து விற்பனை செய்து வந்த அப்துல் ரகுமானின் திறமையை கண்டு போலீசாரே அசந்து போயுள்ளனர்.