ஆண்டிப்பட்டியில் பண விநியோகம் ஜரூர்! கட்டு கட்டாக சிக்கிய கரன்சி! தடுக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு!

ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்ய சென்ற தேர்தல் பறக்கும் படையினரை அமமுகவினர் தடுத்து நிறுத்தியதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தினகரன் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருவதாக தேர்தல் பறக்கும் படையினர் தகவல் கிடைத்தது. தினகரன் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் கடை ஒன்றில் வைத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள அந்தக் கடை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள தினகரன் கட்சியில் அலுவலகத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் விரைந்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் வரும் தகவலை அறிந்து அந்த குறிப்பிட்ட கடைக்கு உரிமையாளர் கடையை பூட்டி விட்டு ஓடிவிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது வார்டு வாரியாக பெயரெழுதி ஒரு வாக்கிற்கு 300 ரூபாய் என்கிற விதத்தில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்றபோது உள்ளே வரக்கூடாது என்று கூறி அக்கட்சியின் நிர்வாகிகள் தகராறு செய்தனர். அதனையும் மீறி தேர்தல் பறக்கும் படையினர் உள்ளே நுழைய முயன்றபோது அவர்களை தாக்குவதற்கு தினகரன் கட்சியினர் ஆயத்தமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டது தினகரன் கட்சியினர் வீதியில் அங்கிருந்து கலைந்து ஓடினர். உடனடியாக கட்சி அலுவலகத்திற்குள் தேர்தல் பறக்கும் படையினர் சென்றபோது அவர்கள் பார்த்த காட்சி அவர்களை அதிர வைத்தது. ஏனென்றால் கட்டுக்கட்டாக பணம் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டுக்கட்டாக பணம் பந்தல் போட்டு வார்டு வாரியாக வாக்காளர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தயார் செய்து வைத்திருந்தனர். மொத்தமாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் தினகரன் கட்சி அலுவலகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து இருப்பது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.