அன்புமணி நம்பர் 1 - பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் கௌரவம்

தமிழக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களில் இருந்து, எந்த வேட்பாளர் மீது அதிக வழக்குகள் உள்ளன என்பதை ஆய்வு செய்தோம். வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 67 பேர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.


அதிக வழக்குகள் கொண்டவர் அதாவது 14 வழக்குகள் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சையான ஈஸ்வரன் என்பவர் மீது உள்ளது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குள் என்று பார்த்தால் ராம்தாஸின் அருந்தவப் புதல்வர், மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் அன்புமணி மீது 12 வழக்குகள் உள்ளன. 

இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அப்பிராணியா இருந்துக்கிட்டு, இத்தனை வழக்குகளை சின்ன அய்யா சந்திக்கிறாருன்னா, அவர் இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்வார் என்று பா.ம.க. தொண்டர்கள் குஷியாகிறார்கள்.

ஆனால், கட்சி என்ற வகையில் பார்த்தால் தி.மு.க.வினர் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன. அதாவது போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. இதனை பா.ம.க. பீட் செய்வது இயலாத காரியம். ஏனென்றால், எந்தக் கட்சியும் அவர்களுக்கு இதைத் தாண்டி அதிக சீட் தருவதற்கு வாய்ப்பு இல்லை.

தி.மு.க.விற்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. இருக்குமே என்று பார்த்தால், அதுதான் இல்லை. அந்த இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துக்கொண்டது. ஆம், சீமான் கட்சியில் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இத்தனை குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவது ஒரு வகையில் நல்லது, ஏனென்றால் தொகுதிப் பக்கம் வர மாட்டார்கள்.