நெல்லைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து 6 வயது சிறுமி ஜன்னல் வழியாக வெளியே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாக வெளியே விழுந்த சிறுமி! அனந்தபுரி எக்ஸ்பிரஸில் நேர்ந்த பயங்கரம்!
நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பேட்ரின்சன். இவருக்கு மனைவி சுதா மற்றும் 6 வயது சிறுமி உள்ளனர். சுதா, 6 வயது சிறுமி ஸ்மைலின், தாத்தா, பாட்டி என குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக வெளியே வந்து கொண்டிருக்கையில், திடீரென அவசரகால ஜன்னல் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஸ்மைலின் திடீரென நிலை தடுமாறி வெளியே விழுந்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ரயில் நிறுத்துவதற்கான சங்கிலியை இழுத்து பிடித்துள்ளனர். ரயில் நின்ற பிறகு ஸ்மைலின் அருகே சென்றபோது சிறுமிக்கு கையில் காயம் ஏற்பட்டு அழுது கொண்டிருந்தார்.
அதிர்ஷ்டவசமாக, ரயில் மெதுவாகச் சென்றதால் எவ்வித ஆபத்தும் நடைபெறவில்லை. இச்சம்பவம் குறித்து நெல்லை ரயில் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனால், சிறுமிக்கு மருத்துவ உதவி செய்ய நெல்லை ரயில் நிலையத்தில் மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதலுதவி செய்து பெற்றோருடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.