நான் அழவில்லை..! நான் கதறவில்லை..! ஏனென்றால் அவன் என் குழந்தை..! நெகிழ வைத்த தாய்!

ஃபுளோரிடா: முகம் முழுக்க சதைக் கட்டிகள் இருந்ததால், முகமே விகாரமாக மாறிய சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை தரப்பட்டுள்ளது.


ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஜேக்சன்வில்லே பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சில்வஸ்ட்ரி. இவரது மகன், கேவின். இச்சிறுவனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாததன் காரணமாக, தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சிறு சிறு கட்டிகளாக சதை வளர்ந்து, அடைத்துக்கொண்டுவிட்டது.

இதனால், சிறுவனின் முகம் பலூன் போல வீங்கி, பார்க்கவே முடியாத தோற்றத்தில் காணப்படுகிறது. இது கருவிலேயே ஏற்பட்ட டிஎன்ஏ பாதிப்பு என்பதால், சிறுவனை ஓரளவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். பிறந்து 18 மாதங்களே ஆன இச்சிறுவன், இந்த அறுவை சிகிச்சைக்காக, 7 மாதங்களை மருத்துவமனையில் செலவிட்டிருக்கிறான். இருந்தும் சரியாகவில்லை.

மருத்துவர்களும் முடிந்த வரை முயற்சித்து, பலன் தரவில்லை. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, அதிகரிக்க இந்நிலை ஓரளவு சரியாகலாம் என்றாலும், இது கடைசி வரை மாற்றமடைய வாய்ப்பில்லை என டாக்டர்கள் தற்போது கைவிரித்துவிட்டனர்.  

இதனால், சிறுவனின் பெற்றோர் வேதனை தெரிவித்தாலும், சிறுவனை உரிய மருத்துவ பரிந்துரைகளின்படி கவனமாக வளர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.