கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரம்… கிடுகிடு முன்னேற்றத்தில் தமிழகம். எடப்பாடி அரசுக்குப் பாராட்டு

கொரோனாப் பாதிப்பாலும், அதைத்தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கைகளாலும், எதிர்மறை (மைனஸ்) நிலைக்குச் சென்ற மாநில வருவாய் பெரும்பாலான மாநிலங்களில் இன்னமும் அப்படியே இருக்கும் நிலையில், தமிழகத்தில் பெரும் மாற்றமாக மீண்டும் நேர்மறை நிலைக்குச் சென்றுள்ளது.


2020-21-ஆம் ஆண்டுக்கான நிதி வருவாயில் செப்டம்பர் வரை மொத்த வருவாய் 67 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த மொத்த வருமானத்தில் மாநில அரசின் சொந்த வருவாய் மட்டும் 38 ஆயிரத்து 426 கோடி ரூபாயாகும். இதுவரை கிடைத்த வருவாயைக் கணக்கிடும்போது, மாநிலத்தின் சொந்த வருவாய் இந்த செப்டம்பர் மாதம் 7 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மாநில வருவாய் நேர்மறையாக மாறியிருப்பது பொருளாதார வளர்ச்சியின் முக்கியக் குறியீடு என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருவதைக்காட்டும் இன்னொரு அறிகுறியாக மாநிலத்தில் வாகன விற்பனை ஏற்கனவே அதிகரித்து உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையையோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டும் செப்டம்பர் மாத விற்பனை 17.18 சதவீதம் அதிகரித்தது. தமிழக கிராமப் பொருளாதரம் வளமாக இருப்பதை டிராக்டர் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது.

பொருளாதார வளர்ச்சியின் இன்னொரு அடையாளமாக கட்டுமானத்துறையும் வளர்ச்சிபெறுவதை அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள் காட்டுகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக ரூ. 1,056 கோடி வருமானம் அரசுக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வருமானம் 1,064 கோடியாக உயர்ந்தது. 2019-ஆம் ஆண்டு எந்தவித பாதிப்பும் இல்லாத ஆண்டாகும். மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த ஆண்டு பத்திரப்பதிவு குறைவதற்குப் பதில் உயர்ந்துள்ளது தமிழகம் தற்போதுள்ள அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் விரைந்து வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பவதையே எடுத்துக்காட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

பெரும்பாலான மாநிலங்களைவிட தமிழகத்தில் மெதுவாகத்தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும், மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் வாகன உற்பத்தியையும் கட்டுமானத்துறையை வளர்ப்பதிலும் மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதிலும் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகத்துக்கு பல்வேறு மட்டங்களில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்துவருகின்றன.