கமல் பிரசாரம் செய்ய வந்தால் நாக்கை அறுக்க அ.தி.மு.க. ரெடி! ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆவேசம்!

கோட்சேவை கமல்ஹாசன் இந்து தீவிரவாதியாக சித்தரித்த விவகாரத்தில், அவருக்கு ஏகப்பட்ட இடங்களில் இருந்து சிக்கல்கள் முளைத்துவருகிறது.


பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அதிரடி கிளப்பிவரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி பதவி விலகவேண்டும் என்று கமல்ஹாசன் கட்சியில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.  இதைக் கேட்ட ராஜேந்திர பாலாஜி மேலும் டென்ஷன் ஆகிவிட்டார். ‘தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவன் என பார்க்காமல் அவர்களை தீவிரவாதி என்றுதான் சொல்லவேண்டும். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள்’ என்று மீண்டும் கமல் நோக்கி பாய்ந்திருக்கிறார்.

பா.ஜ.க., அ.தி.மு.க. மட்டுமின்றி, ‘இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே கமல்ஹாசன் மதக் கலவரம் தூண்டுவதாக முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.முஸ்தபா, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். எதையும் கண்டுகொள்ளாத பிரேமலதாவையும் கமல்ஹாசனுக்கு எதிராக பேச வைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, கமல்ஹாசனின் பேச்சுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது.  

இந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் நாக்கை அறுக்கப் போகிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக அ.தி.மு.க. நாளை வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசன் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.