அதிமுக வேட்பாளர் தேர்வு! ஜெயலலிதா முன்னாள் உதவியாளர் வெளியிட்ட திடுக் தகவல்!

புரட்சித்தலைவி அம்மா - வேட்பாளர் நேர்காணல். அனைத்துக் கட்சிகளிலும், வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் தேர்வு செய்யப்படமாட்டோமா? என தவிப்போடு தொண்டர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்திய வேட்பாளர் நேர்காணலின் போது, நான் கவனித்த ஒரு நிகழ்வை இத்தருணத்தில் சொல்வது பொருத்தமாக இருக்குமென்றே நினைக்கின்றேன்.


2001-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், வேட்பாளர் தேர்வில் எனது தந்தை புலவர் சங்கரலிங்கம் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார். தகுதியானவர்களை, மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்து, இதயதெய்வம் அம்மா அவர்களிடம் சமர்ப்பித்தார்கள். எனது தந்தை, தலைமைக் கழகத்தின் மேலாளராக பணியிலிருந்தார். எப்போதும் அரசியல் முடிவுகளை, கழக நிர்வாகிகளுடன் கலந்து முடிவெடுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2001-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் என்னவோ, எனது தந்தையை கலந்தே முடிவெடுத்தார். வேட்பாளர் தேர்வு செய்யும் நாளை, அம்மா அவர்கள் குறிப்பிட்டு, என்னிடம் அந்த பட்டியலை கொடுத்து அதிலிருப்பவர்களை நேர்காணலுக்கு வரச்சொன்னார்கள். அதன்படி, அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, போயஸ்கார்டன் வந்திருந்தார்கள்.

இதயதெய்வம் அம்மா அவர்கள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு, வந்திருந்த மூன்று பேர்களையும் தனித்தனியாக பார்த்த பிறகு, புலவரை வரச்சொல்லி விவாதித்து, ஒருவரை தேர்வு செய்தார்கள். வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு தொகுதிக்கான மூன்று வேட்பாளர்களையும் தனித்தனியாக சந்தித்த பிறகு, எனது தந்தை புலவர் அவர்களை வரச்சொன்னார்கள்.எனது தந்தை, மாண்புமிகு அம்மா அவர்களை சந்திக்கச் சென்றவுடன், அம்மா அவர்கள் கேட்ட குறிப்பு ஒன்றை கொடுப்பதற்காக நான் உள்ளே சென்றேன். அப்போது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், எனது தந்தையிடம் பேச ஆரம்பித்தார். ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்டு பேசுவது அம்மா அவர்களுக்கு அறவே பிடிக்காது என்பதால், குறிப்பை கொடுக்க தயங்கி உள்ளே நின்றிருந்தேன்.

“இதயதெய்வம் அம்மா அவர்கள், புலவரிடம், இம்மூவரில் யாரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனது தந்தை இரண்டாம் நபரை தேர்வு செய்யலாம் என்றார். ஏன்? புலவர், முதல் நபர் நல்லவராக தெரிகிறாரே! அவர்தான் தகுதியானவர் என்று எனக்குப் படுகிறது. நீங்கள் அவர் சரியில்லை என்கிறீர்களா! ஏன்? என்ன காரணம் சொல்லுங்கள் என்று கேட்க, எனது தந்தை தயக்கத்துடன் அம்மா, முதல் நபர் நல்லவர், தகுதியானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டாம் நபர் வல்லவர், வசதி படைத்தவர் என்றார். பணம் இல்லாததால் தானே அப்படிச் சொல்கிறீர்கள் புலவர் என கோபமாக கேட்டார்கள் இதயதெய்வம். எனது தந்தை அமைதியாக இருந்தார். புலவர், எனக்கு வல்லவர் வேண்டாம், நல்லவர் போதும் என்றுச் சொல்லி, முதல் நபர் தான் வேட்பாளர், அவர் பெயரைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு நானே உதவி செய்கிறேன் என்றார்.”

இந்த உரையாடலை கேட்கும் சந்தர்ப்பம், குறிப்பை அம்மா அவர்களிடம் கொடுக்க சென்றதால் எனக்கு கிடைத்தது. இப்படி ஒரு தலைவர், யாரும் இருப்பார்களா! என்ற ஆச்சர்யத்தோடு நான். கடைமட்டத் தொண்டனையும் முதலமைச்சர், அமைச்சர் ஆக்கிய பெருமையை வேறு யாராலும் பெறமுடியாது என்றே நினைக்கின்றேன்.வசதி வாய்ப்புகள் இல்லையென்றாலும், இதயதெய்வம் அம்மா அவர்களின் பார்வையில், நாம் பட்டாலே போதும், உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று தொண்டர்கள் கருதினார்கள். கழக நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களையும், உதவியாளர்களையும் மீறி, ஒரு தொண்டன் உயர்நிலையை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டுமே அடைய முடியும் என்ற ஆளுமை, அம்மா அவர்களைத் தவிர வேறு யார் பெறமுடியும். அந்த மனிதநேயமிக்கத் தலைவருடன் நாங்கள் பயணித்ததே, இறைவன் எங்களுக்கு அளித்த ஐஸ்வர்யம் தான்...

என்றும் அம்மாவின் நினைவோடு,

ஜெ பூங்குன்றன் சங்கரலிங்கம்