நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்ரீதேவி பங்களா' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீச்சல் உடை! சரக்கு கோப்பை! சிகரெட்! பிரியா வாரியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஸ்ரீதேவி கணவர்!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் இயக்குனர்
போனி கபூரை மணந்துகொண்டு, மும்பையில் செட்டில் ஆனார். நல்ல நிலையில் அவரது குடும்ப
வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. இந்த சூழலில், கடந்த ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி,
தனியார் ஓட்டலில், குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம்
பல தரப்பிலும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
எனினும், அதற்கான உண்மை
காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், நடிகை பிரியா பிரகாஷ்
வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' எனும் படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
அதில், பிரியா பிரகாஷ், குளியல் அறையில் கதறி அழுதபடியும், பின்னர் மர்மமாக இறந்து
கிடப்பதைப் போலவும் காட்சிகள் வருகின்றன. உச்சக்கட்டமாக, அவரது கதாபாத்திரத்திற்கு,
ஸ்ரீதேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது நடிகை ஸ்ரீதேவியின்
வாழ்க்கை கதைதான் எனப் பல தரப்பிலும் கூறப்படுகிறது. இந்த டிரெய்லர் வெளியான
சில மணிநேரங்களில், ஸ்ரீதேவியின் கணவரும், இயக்குனருமான போனி கபூர், ஸ்ரீதேவி
பங்களா படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை,
ஸ்ரீதேவி பங்களா படத்தின் இயக்குனர் மாம்பல்லி உறுதி செய்துள்ளார். அவர் மேலும்
கூறுகையில், ''இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஸ்ரீதேவி' என்பது பொதுவான பெயர்.
அதற்கும், இறந்துபோன ஸ்ரீதேவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஸ்ரீதேவி பெயரை யார்
வேணாலும் பயன்படுத்தலாம். இதுபற்றி போனி கபூருக்கும் விளக்கம் அளித்துள்ளோம். இந்த
விவகாரத்தை நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்,'' என்றார். எனினும்,
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இதுபற்றி கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.