சாலை ஓரம் கவிழ்ந்து கிடந்த லாரி! அதன் மீது மோதி நொறுங்கிய டெம்போ டிராவலர்! துடியாய் துடித்த 8 பேரின் நிலை?

திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடந்த லாரி மீது ஒரு வேன் மோதிய கோர விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு கொசுவை ஒழிக்கும் பேட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எச்சூர் என்ற கிராமத்தில் சிறிய பாலத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து கிடந்தது.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் தல்சூரில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு ஒரு குழுவினர் டெம்போ டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். இரவில் அதிக வேகத்துடன் வேனை ஓட்டிவந்த ஓட்டுநர், திடிரென சாலையோரம் கிடந்த லாரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பிரேக் போட முயன்றும் பலன் அளிக்காமல் விபத்தில் சிக்கியிருந்த லாரி மீது மோதினார். அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.