18 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளம்பெண்!. சகோதரி வீட்டு ஃப்ரீசரில் தற்போது கண்டுபிடிப்பு!

18 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளம்பெண், தற்போது அவரது சகோதரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குரோசியா வுக்கு வடக்கே உள்ள மலா சுப்போட்டிகா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மினா டொமினிகா. ஜாக்ரெப்-ல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் 2000ஆம் ஆண்டு மாயமானார்.

 

அப்போது  டொமினிக்காவுக்கு வயது 23. கப்பலில் பணியாற்ற போவதாக கூறி சென்ற தங்களது பெண் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். 2005ஆம் ஆண்டு இந்த புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் பல இடங்களில் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

 

18 ஆண்டுகள் கடந்த நிலையில் சனிக்கிழமை அன்று ஒரு முடிவு கிடைத்தது. டொமினிகாவின் சகோதரி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டுக்கு கீழே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஃப்ரீசர் வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டனர்.

 

உள்ளே திறந்து பார்த்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டிக்குள் 18 ஆண்டுகளுக்கு முன் மாயமான டொமினிகாவின் சடலம் கிடந்தது. அந்த சடலத்தை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

உடற்கூறு ஆய்வறிக்கைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்ஆனால் அவர் யார் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு வயது 45 என்றும் அவர் டொமினிகாவின் சகோதரி என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2000 அல்லது 2001ஆம் ஆண்டு வாக்கில் டொமினிக்கா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.