சென்னையில் ஆர்டர் - ராஜஸ்தானில் இருந்து டெலிவரிக்கு புறப்பட்ட ஸ்விக்கி பாய்!

சென்னை வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்ய ராஜஸ்தானில் இருந்து ஸ்விக்கி ஊழியர் புறப்பட்ட சுவாரசியம் அரங்கேறியுள்ளது.


சென்னையைச் சேர்ந்த பார்கவ் ராஜன் மிகவும் பசியாக இருந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வட இந்திய உணவை ஸ்விக்கி இணையதளத்தில் ஆர்டர் செய்தார். ஆனால் அந்த ஆர்டர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு உணவகத்தில் பதிவானது.

 

இதனால் அவர் சற்று குழப்பத்தில் இருந்த நிலையில் அடுத்த 12-வது நிமிடத்தில் ஆச்சரியமாக மாறிய சம்பவமும் அரங்கேறியதுஅவரது செல்ஃபோனுக்கு வந்த தகவல் தான் ஆச்சரியத்துக்கு காரணம். அவரது ஆர்டரைப் பெற்று டெலிவரி ஊழியர் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக ஸ்விக்கி நிறுவனத்திலிருந்து வந்த தகவல் அவரது  பசியையும் மறந்து சிரிப்பில் ஆழ்த்தியது

 

இதையடுத்து டிவிட்டர் மூலம் ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்பு கொண்ட அவர், ராஜஸ்தான் - சென்னை இடையேயான தூரத்தைக் காட்டும் மேப்பை பதிவிட்டு உங்கள் டெலிவரி நபரின் அதிவேகம் மிகச் சிறப்பானது என நகைச்சுவையாக பதிவிட்டார்.

 

அப்போது தான் ஸ்விக்கி நிறுவனத்துக்கு தங்கள் தவறு தெரியவந்தது. கடவுள் மட்டுமே இந்த தூரத்தை குறுகிய நேரத்தில் கடக்க முடியும் என பதிவிட்ட ஸ்விக்கி நிறுவனம், தங்கள் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்றும்எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தது.

 

இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் நகைச்சுவை விவாத மேடையாகியிருக்கிறது. ஸ்விக்கி ஊழியர் ராஜஸ்தான் - சென்ன்னை இடையேயான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் துரத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க 40 நாட்கள் ஆகும் என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

 

தொடர்புடைய ஸ்விக்கி கிளை நிறுவனத்தை எலன் மஸ்க் தேடிக்கொண்டிருப்பதாகவும், டெலிவரி ஊழியர் உடனடியாக சென்னை வர ஒளியின் வேகத்தில் செல்ல வேண்டுமா அல்லது ஒலியின் வேகத்தில் செல்ல வேண்டும் என்ற ரீதியில் வேறு சிலரும் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.