ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி! கொரோனா தாக்கியதால் அவர்களை நிரந்தரமாக பிரிந்த பரிதாபம்!

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை ஈன்றெடுத்த தாயார் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்திருப்பது பிரிட்டன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் நாட்டில் "ஸ்லோ" என்ற பகுதியில் லேபர் கட்சியின் கவுன்சிலராக ஷப்னம் என்ற 39 வயது பெண் பணியாற்றி வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியது. இவர் 2006-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 26-ஆம் தேதியன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருடைய பூர்வீகமானது பாகிஸ்தான்.

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர் சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று பிரிட்டன் திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றானது அவருடைய உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது. 

கடந்த 24 நாட்களாக வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.