8.5 லட்சம் பேர் போட்டி..! இந்திய ராணுவத்துக்கு தேர்வான ஒரே ஒரு பெண்! 18 வயதில் சாதித்த பீமக்கா..!

ராணுவ தேர்வில் பெண்கள் பிரிவில் வட கர்நாடகாவை சேர்ந்த ஒரே ஒரு பெண் தேர்ச்சி பெற்றிருப்பது அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் தார்வார் மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட மடிக்கோபால் எனும் கிராமத்தில் பீமக்க சவ்கானா என்ற கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய இளமைப்பருவத்திலிருந்து, ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையிருந்தது. 

வட கர்நாடகாவை சேர்ந்த 11 மாநிலங்களில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடந்தது. முதலில் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 8.5 லட்சம் பேருக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வானது தார்வார் மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு முடிவுகளை மத்திய அரசாங்கம் நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதிய பெண்களில் பீமக்க சவுக்கானா மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். 

ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்றதை கேள்விப்பட்டவுடன் அவர், "ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருந்தேன். தற்போது எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது தூக்கத்திலிருந்து எழுந்துள்ள கனவு போன்று அமைந்துள்ளது. என்னுடைய குறிக்கோளை என் பெற்றோரிடம் முதலில் கூறினேன். அவர்கள் எந்தவித தயக்கமுமின்றி அதற்கு சம்மதம் தெரிவித்தனர். என் பெற்றோருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராணுவ பணியில் இணைந்து இந்திய திருநாட்டை காக்க என் இன்னுயிரையும் தருவேன்" என்று கூறினார்.

இந்த செய்தியானது மடிக்கோபால் கிராமத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.