பெண் இன்ஸ்பெக்டரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற பெண் காவல் அதிகாரிகள்! நெகிழ வைக்கும் காரணம்!

இறந்துபோன காவலரின் உடலை உதவி பெண் காவல்துறை ஆணையர் தூக்கி சென்ற புகைப்படமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஸ்ரீதேவி என்று 48 வயது பெண் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றிவந்தார். இவருடைய வளர்ப்பு மகனின் பெயர் முனுசாமி. இன்னிலையில் ஸ்ரீதேவிக்கு சில மாதங்களுக்கு முன்னர் திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டபோது, அவருடைய வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. 

புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதேவி 11-ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் இறந்து போனார். ஸ்ரீதேவி இறந்த செய்தியைக் கேட்டவுடன் காவல்துறையினர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். 12-ஆம் தேதியன்று பிற்பகலில் இறுதி சடங்குகள் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தன.

ஸ்ரீதேவியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில், தண்டையார்பேட்டை துணை காவல்துறை ஆணையரான சுப்புலட்சுமி,  தலைமை கான்ஸ்டபிள் வரலட்சுமி, ஆய்வாளர்கள் ரமணி மற்றும் இந்திராணி ஆகியோர் ஸ்ரீ தேவியின் உடலை சுமந்து கொண்டு காசிமேடு மயானம் வரை சென்றனர். 

இந்தக் காட்சியானது அங்கிருந்த பொதுமக்கள் பெரிதும் வியக்க வைத்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து உதவி காவல்துறை ஆணையரான சுப்புலட்சுமி கூறுகையில், "ஸ்ரீதேவியின் மறைவு எங்கள் அனைவருக்கும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கிற்கு சென்றபோது அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை நாங்கள் செலுத்தினோம்" என்று கூறினார்.

குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த சம்பவமானது வேப்பேரியில் சோகத்தை ஏற்படுத்தியது.