வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.28 கோடி அளவுக்கு பண மோசடி செய்த, தனியார் நிறுவன அதிகாரி மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக 1 லட்சம் பேருக்கு அல்வா! ரூ.28 கோடியையும் சுருட்டி மிரட்டல்!
இன்றைய சூழலில், ஆன்லைன் வழியாக பல்வேறு மோசடிகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இது மட்டுமல்ல, தொழில்நுட்ப வரவால், பலரும் ஆன்லைன் மூலமாகவே வேலைவாய்ப்பு தேடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், சில தனியார் நிறுவனங்கள், ஆன்லைன் வழியாக, வேலைவாய்ப்பு சேவையை வழங்கியும் வருகின்றன. ஆனால், ஐதராபாத்தைச் சேர்ந்த அஜய் கொல்லா என்ற நபருக்கு வித்தியாசமான ஒரு யோசனை ஏற்பட்டது.
விஸ்டம் ஐடி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கிய அந்த நபர், அதன்பேரில், விஸ்டம்ஜாப்ஸ் என்ற ஆன்லைன் வேலைவாய்ப்பு இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்.
இந்த இணையதளத்தின் சிஇஓ மற்றும் இயக்குனராக தன்னை நியமித்துக் கொண்ட அஜய் கொல்லா, ஐதராபாத்தில் தனி அலுவலகத்தையும் ஏற்படுத்தினார். இதற்காக, 13 ஊழியர்களையும் பணியில் அமர்த்தினார்.
இதன்பிறகு அவர் செய்தது இன்னும் சுவாரசியமான விசயம். ஆம். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஆன்லைன் மூலமாக, வேலை தேடுவோரை இலக்காக வைத்து, ஒரு சதித்திட்டத்தை, அஜய் கொல்லா தீட்டினார்.
அந்த திட்டத்தின்படி, ஆன்லைன் மூலமாக, வேலை தேடி தங்களிடம் பதிவு செய்துகொள்ளும் நபர்களுக்கு, உரிய வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி, அவர்களிடம் இருந்து சேவைக்கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் ஒரு விதமாகவும், வெளிநாட்டு வாடிக்கையாளர் என்றால் ஒரு விதமாகவும் இதற்கென கட்டணம் நிர்ணயித்து, அவர்கள் வசூலித்து வந்துள்ளனர்.
இதன்படி, ஐதராபாத்தைச் சேர்ந்த யேடுகொண்டலு கானவரப்பு என்ற இளைஞர் வேலை தேடி, விஸ்டம் ஜாப்ஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக பதிவு செய்தார். மத்திய கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் பொருத்தமான வேலையை தனக்கு பெற்று தரும்படி அவர் கோரியுள்ளார்.
அதற்காக, நிறுவன பிரதிநிதியின் பேச்சை நம்பி, அமெரிக்க டாலர் மதிப்பில் $675 பணமும் செலுத்தியுள்ளார். இந்த பணத்தில் 150 டாலர்கள் டெபாசிட் தொகையும், எஞ்சிய தொகையை ஏஜென்ட் கமிஷனாகவும் கட்டியுள்ளார்.
ஆனால், இது ஒரு மோசடி என்று வெகு விரைவிலேயே அவர் உணர்ந்துகொண்டார். உடனடியாக, இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் ஏடுகொண்டலு புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்று சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, விஸ்டம்ஜாப்ஸ் இந்தியா என இந்தியாவிலும், துபாய், மலேசியா, ஸ்ரீலங்கா, ஜோர்டான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், அவற்றுக்கு ஏற்ப தனித்தனி இணையதளங்களையும் அஜய் கொல்லா குழுவினர் தொடங்கியுள்ளனர்.
அதன்மூலமாக, வேலை தேடி விண்ணப்பிப்பவரிடம் நைசாகப் பேசி பணம் கறப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததையும் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, விஸ்டம்ஜாப்ஸ் நிறுவன சிஇஓ எனக் கூறிக் கொள்ளும் அஜய் கொல்லா மற்றும் அவரது ஊழியர்கள் 13 பேரை, தற்போது ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களின் அலுவலகத்தைச் சோதனையிட்டதில், மேலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்திய அளவில் மொத்தம் 69,962 பேர் வேலைவாய்ப்பு பெற்று தரும்படி சுமார் ரூ.28 கோடி அளவுக்கு பணம் கட்டி ஏமாந்துள்ளனர். அதேபோல, வெளிநாடுகளைச் சேர்ந்த 35,000 பேர் இதேபோல, பணம் கட்டி, வேலை தேடி தரும்படி கேட்டு ஏமாந்துள்ளனர்.
இந்த ஆன்லைன் மோசடியின் மொத்த மதிப்பு ரூ.70 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு இத்தகைய போலி நிறுவனத்தை தொடங்கிய அஜய் கொல்லா, 2011ம் ஆண்டில் இந்திய கம்பெனிகள் பதிவு ஆணையத்திலும் பதிவு செய்துள்ளான். இதனை ஒரு ஐடி சேவை நிறுவனமாக காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் இத்தகைய மோசடியை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.