மூன்றாவது முறை பிரதமர் ஆவாரா மோடி..?

பிரபல ஜோதிடர் சொல்லும் ஜாதக ரகசியம்


கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசத்தை யாரும் கண்டுபிடிக்கவே முடியாது.

ஆச்சர்யங்களும் அதிசயங்களும் எக்கச்சக்கமாக நடக்கும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி. ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்த ஒருவர், இந்தியாவுக்கே பிரதமர் எனும் உயரிய பதவிக்கு வந்து ரயிலையே விற்பனை செய்திருக்கிறார்.

ஜனசக்தி இயக்கத் தலைவர்கள் விதைத்த விதையை, இன்று மோடி அறுவடை செய்து வருகிறார். ஜனசக்தி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வின் துடிப்புமிக்க செயல்வீரனாகவும் செயல் புயலாகவும் மாறி அனைவரது மனதையும் கவர்ந்தார். திறமை, அறிவு, மதி நுட்பத்துடன் பக்தி என்னும் யுக்தியைக் கலந்து, இந்து மத உணர்வை தட்டி எழுப்பியதன் மூலம் தலைமை பீடத்திற்கு வந்தார்.

இந்த இடம் அதிர்ஷ்டத்தில் அல்லது யாரோ கொடுத்து அவருக்குக் கிடைத்து விடவில்லை. இதற்காக நாற்பது ஆண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார். குடும்பம், உறவு என்பதையெல்லாம் தள்ளிவைத்து, முழு நேர அரசியலில் இறங்கி எதிரிகளுடன் மூர்க்கமாக மோதியிருக்கிறார். கட்சியில் தன்னை தாண்டி வேறு ஒரு தலைவர் இல்லை என்ற சிந்தனையை புகுத்திவிட்டார்.

குஜராத் மாநிலத்துக்கு முதல்வர் ஆனதும், அரசியல் ஆலோசகர்களை நியமித்து குஜராத் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் என்று விளம்பரம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இது, மிக சிறப்பாக மோடிக்குக் கை கொடுத்தது. அன்றைய தினம் மீடியாக்கள், பத்திரிகைகள் என்ன சொன்னாலும் அவற்றை உண்மை என்று மக்கள் நம்பினார்கள். ஆகவே, மோடியே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பா.ஜ.க. மிகச்சிறப்பாகப் புகுத்தியது.

நூறு ஆண்டுகால வரலாறு படைத்த காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியின் அதிருப்தி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, ஊழல் போன்றவற்றை சமூகவலைதளம், மீடியா மூலம் மீண்டும் மீண்டும் பரப்பி, அரசியல் சூழலை தனது பக்கம் திருப்பிக்கொண்டார்.

இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் மோடி மீது ஒரு தனி கவர்ச்சியே உருவானது. மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் பா.ஜ.க. என்ற கட்சியைக் கவனிக்காமல் நரேந்திரமோடி என்ற தனிப்பட்ட மனிதர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். இந்தியாவின் பிரதமராக மாறினார். மாற்றத்துக்கான தன்னுடைய பணி இன்னமும் முடிவடையவில்லை என்று 2019 தேர்தலில் உருக்கமாகப் பேசினார். மக்களும் அதை நம்பி மீண்டும் அவருக்கு வாக்களித்தார்கள்.

இப்போது 2024 தேர்தலில் மீண்டும் வாக்கு கேட்கிறார். 2047ல் இந்தியாவை வல்லரசாக மாற்றிக் காட்டுவேன் என்று மார் தட்டுகிறார். அவர் மூன்றாவது முறை பிரதமர் பதவிக்கு வருவதற்கு அவரது ஜாதகக் கட்டம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.

மோடி ஜாதகம்

மோடியின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, கிரக நிலைகளுக்கு தகுந்தாற் போல் அவரது வாழ்க்கை அமைந்து உள்ளதை அறியலாம். இவர் சிம்ம லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் என்பதால் அரசாள ஆளுமை மிக்க உரிய கிரகமான சூரியன், செவ்வாய், குரு நல்ல பலம் பெற்று இருப்பதும் லக்னத்தில் சனியும் இருப்பதால் பொறுப்புமிக்க பதவி ஏற்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

சிம்ம லக்னம் என்பதால் எதற்கு துணிந்து செயல்படக்கூடிய நபராகவும் பின்விளைவு பற்றி கவலை இல்லாத காரியவாதியாக இருக்கிறார். விருச்சிக ராசி குணம் சுயலாபத்திற்காக எப்படி வேண்டுமானலும் நடிப்பது என்பதற்கு மோடியே உதாரணம். இவருக்கு தொடக்க காலத்தில் சனி திசையே 15 வருட காலம் நடந்து உள்ளது. லக்னத்திற்கு பாதக திசை என்பதால் டீ விற்பது, பேப்பர் போடுவது, என வறுமையில் போராடியிருக்கிறார்.

இரண்டாம் பாவத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பதால் நல்ல வசீகர பேச்சால் பலரை கவர்ந்து இழுக்கும் சக்தி பெற்றவர். மேலும் 2 ல் கேதுவும் 7 ல் குருவும் இருப்பது குடும்பம் என்பது திருப்தி இல்லை என்றே காட்டுகிறது.

குரு லக்னத்தை பார்ப்பதும் தன்னை முன்னிலைப்படுத்தவும் லக்னத்தில் சனி இருப்பதும் சனியே 6க்குடையவன் என்பதால் எதிரிகள் இன்றி காட்டு ராஜா போல் தன் இஷ்டத்திற்கு வெளிநாடு, காடு, மேடு, மலை, கடல் என சுற்றிக்கொண்டு இருக்க காரணமாக அமைந்தது.

மக்கள் இவர் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையாலே பதவிக்கு வந்தார். அந்த நம்பிக்கை இன்றும் மோடி மீது மக்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. எனவே, மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்வாரா அல்லது பதவி பறிபோகுமா என்பதை கால நேரம் காட்டும் திசை புக்தி கொண்டு பார்ப்போம்

தொடக்க காலத்தில் சனி திசை என்பதால் இவரது வாழ்க்கை போராட்டம் நிறைந்தாக அமைந்து விட்டது, அதன் பின் வந்த புதன் திசையில் இவரது வாழ்வில் ஏற்றமான போக்கு காணப்பட்டது

இதன் பின் கேது திசையும் சுக்ர திசையும் கட்சி பொறுப்புகளில் படிப்படியாக முன்னேறி வந்தார் என்பதும் சுக்ர திசை முடிவில் குஜராத் முதல்வர் பதவிக்கு வந்தார். இதன் பின் சூரிய திசையில் நல்லாட்சி தந்து குஜராத்தை இந்தியாவில் தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றியதாக விளம்பரம் செய்து, பெரும் புகழையும் நம்பிக்கையையும் மக்களுக்கு உருவாக்கினார்.

தற்போது சந்திர திசை தொடங்கி நடை பெற்று வருவதால் இவர்க்கு 2011ல் சந்திர திசை தொடங்கியது. எனவே 2014-ல் நடந்த தேர்தலில் வெற்றியும் பிரதமர் பதவியும் தேடி வந்தது. அதன் பின் 2019 தேர்தலில் சொல்லி வைத்தது போல் பெரு வெற்றி பெற்றார்.

இவர் மீது 10 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த மக்கள் நம்பிக்கை இன்று இல்லை. பத்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாலும் சகல மக்களையும் பாதிக்கும் பெட்ரோல், கேஸ் விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபம் அனைவருக்கும் உள்ளது. அதோடு, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு குளறுபடிகள் என பல்வேறு தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே அவரது கிரக திசை புக்தி செல்வாக்கு குறைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

சந்திர திசை தொடக்கத்தில் யோகம் செய்தாலும் தற்போது சந்திர திசை சுக்ர புக்தி 23 - 11-2025 நடப்பில் இருப்பதால் சுக்ர புக்தி சாதகம் இல்லாத புக்தி என்பதால் மீண்டும் பிரதமர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என கிரக நிலை காட்டுகிறது அடுத்து வரக்கூடிய செவ்வாய் திசையும் சாதகம் இன்றி இருப்பதால் இனி இவர் வாழ்நாளில் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு வரப்போதில்லை.

பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வரப்போவதில்லை என்று அவரது ஜாதகம் சொல்வதால், இந்தியாவின் ஜாதகம் எப்படியிருக்கிறது என்று பார்த்தோம்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு இந்தியா ஒன்றுபட்ட நாடாக இல்லையென்றாலும் இங்கே செல்வங்கள் கொட்டிக் கிடந்தன. இவற்றை கொள்ளை அடிப்பதற்கே பல நாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்தனர். அதேநேரம், வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர் ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்றுபடுத்தி உழைப்பையும் செல்வத்தையும் சுரண்டிக் கொழுத்தார்கள். இங்கு நிலவிய பெண்ணடிமை, ஜாதி, சமய ஏற்றத் தாழ்வுகள் போக்கவும் கல்வியும் புதிய தொழில்கள் உருவாகவும் அவர்கள் காரணமாக இருந்தனர் என்றாலும் இத்தனை ஆண்டுகளாகியும் இந்தியர்கள் ஏழையாக இருப்பதற்கே ஆங்கிலேயர்களே முழு காரணம்.

காங்கிரஸ் இயக்கம் உருவானபிறகே இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வு ஒன்றுபட்டு எழுந்தது. அமைதிப் புரட்சியாக காந்தியின் தலைமையில் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில் வெள்ளையர்கள் சுதந்திரம் தரவேண்டிய சூழலுக்கு ஆளானார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதும் தேனாறும் பாலாறும் ஓடும் என்று மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் அடித்த கொள்ளையை ஜனநாயகம் என்ற பெயரில் நம்மூர் அரசியல்வாதிகள் தின்று கொழுத்தார்கள். அதனால் ஓட்டு போடுவதற்கு காசு வாங்கும் அளவுக்கு மக்களும் கேவலமான மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தான் தங்கள் நிலை என்று மக்கள் உணர்ந்துவிட்டனர். அதனால், காசு கொடுத்தால் ஓட்டு என்ற அளவுக்கு மக்கள் மனநிலை மாறிவிட்டது. எனவே, இப்போது இந்திய நாட்டின் ஜாதக நிலை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்திய ஜாதகம்

இந்தியா சுதந்திரம் பெற்ற ஜாதகத்தை புதிய கோணத்தில் காண வேண்டும் அதன்படி இந்தியா சுதந்திரம் 15-8-1947-ல் இரவு 12.00 மணிக்கு டெல்லியில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதற்கு உரிய கையெழத்து ஒப்பந்தம் ஆகி அறிவிப்பு வெளியாகின அதன்படியே ஜாதகம் போடப்பட்டது.

சுதந்திரம் கிடைக்கும் போது ரிஷப லக்னம் கடக ராசியில் பூசம் நட்சத்திரம் நடைபெற்றது இதனால் சனி திசை முழுமையாக நடைபெற்றது. 1960 வரை சனி திசை காலம் நாடு வளர்ச்சி பாதையில் வேக நடை போட்டது அதன் பின் புதன். கேது சுக்ரன் சூரியன் சந்திரன் வரை வளர்ச்சியில் உள்ளது.

தற்போது சந்திர திசை சுக்ர புக்தி 10-9-2025 வரை நடைபெற உள்ளது. இக்கால கட்டத்தில் பெண்களுக்கு ஆபத்தான காலகட்டம் எனில் சந்திரன் சுக்ரன் கடக ராசியில் நிற்க அதற்கு கோச்சார ராசியில் சனி நிற்க பெண்களுக்கு நிறையவே சிக்கல் உருவாகும்.

பொதுவாக மக்கள் ராசியான கடக ராசிக்கு தற்போது சனி கும்ப ராசியில் அஷ்டமத்தில் இருப்பதால் எதிர்பாராத விபத்துகளும் மரணமும் அதிகரிக்கும். ஜாதி, மத மோதல் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும். சனி கும்ப ராசியை விட்டு செல்லும் வரை அதாவது 2026 வரை பொதுமக்கள் பீதியில் தான் இருப்பார்கள். சந்திரன் திசை சுக்ர புக்தி நடைபெறும் காலத்தில் புயல் மழை வெள்ளம் பெருகி வரும்.

2024ம் ஆண்டு முழுவதும் நிலையான ஆட்சி இல்லாமல் குழப்பமே நிகழும். 2025-ம் ஆண்டு செவ்வாய் திசையில் திறமையான மனிதர்கள் கையில் ஆட்சி போகும். விவசாயத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.

கணித்தவர் : ஆர். சூரியநாராயணமூர்த்தி

தொடர்புக்கு : 9443923665 & 98650 65849