LKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்..! வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்..! பரபர பின்னணி!

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்விக் குழுமத்திற்கு சொந்தமாக உள்ள சுமார் 50 இடங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


கடந்த 1986ம் ஆண்டு சென்னை முகப்பேரில் தொடங்கப்பட்டது வேலம்மாள் பள்ளிக்கூடம். சுமார் 34 ஆண்டுகளில் தமிழகத்தின் மிக முக்கியமான கல்விக் குழுமமாக வேலம்மாள் உருவெடுத்துள்ளது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது வேலம்மாள் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பது நடுத்தர குடும்பத்து பெற்றோரின் கனவுகளில் ஒன்று.

பெற்றோர்களின் இந்த கனவை சரியாக காசாக்கி வருகிறது வேலம்மாள் பள்ளிக்கூட குழுமம். இந்த குழுமத்தின் தலைவராக முத்துராமலிங்கம் உள்ளார். வேலம்மாள் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக வேல்முருகன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து அமல்படுத்திய ஸ்கீம் எனப்படும் திட்டம் தான் இவர்கள் கல்விக் குழுமத்தை மிகப்பெரியதாக மாற்றிக் காட்டியது.

அதே போல் அந்த ஸ்கீம் திட்டம் தான் தற்போது வேலம்மாள் குழுமத்திற்கு தலைவலியை உருவாக்கியது. சென்னை முகப்பேர் அருகே செயல்பட்டு வந்த வேலம்மாள் குழுமம் அடுத்தடுத்து சென்னையில் பல்வேறு பள்ளிக்கூடங்களை கட்டியது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் வேலம்மாள் கட்டும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

வருடத்திற்கு ஒன்று முதல் அதிகபட்சமாக 3 பள்ளிக்கூடங்கள் வரை கூட கட்டப்பட்டன. சென்னை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, கரூர், திருச்சி போன்ற இடங்களிலும் வேலம்மாள் கல்விக்குழுமத்திற்கு சொந்தமாக பள்ளிக்கூடங்கள் உள்ளன. மதுரை ரிங்ரோடு பகுதியில் பிரமாண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளன.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் கட்டணம் மிகவும் குறைவு என்கிற ஒரு பேச்சு உண்டு. மேலும் கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கு இலவசமாக கூட வைத்தியம் பார்ப்பதாக சொல்கிறார்கள். இந்த அளவிற்கு வேலம்மாள் குழுமம் வளரக் காரணமானது அந்த ஸ்கீம் திட்டம் தான். அது என்ன ஸ்கீம் என்கிறீர்களா?

பொதுவாக சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக் கூடங்களில் ஆண்டு தோறும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கூட வசூலிக்கும் பள்ளிகள் உண்டு. இதே பாணியில் தான் துவக்கத்தில் வேலம்மாள் குழுமம் கட்டணம் வசூலித்து வந்தது.

இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளக்கு முன்னர் ப்ரீ கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை வேலம்மாள் பள்ளிக்கூடத்தில் படிக்க 2 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் என்கிற ஸ்கீம் அறிமுகம் ஆனது. இதனை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைநத் பெற்றோர் 2 லட்சம் ரூபாயை திரடடி ஸ்கீமில் இணைந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொட்டிய இந்த 2 லட்சம் ரூபாயை வைத்து தான் அடுத்தடுத்து பள்ளிக்கூடங்களை திறந்து வருகிறது வேலம்மாள்.

அதே நேரத்தில் தற்போது இந்த ஸ்கீம் ரேட் உயர்ந்துவிட்டது. ப்ரீகேஜி முதல் 10ம் வகுப்பு வரை வேலம்மாளில் படிக்க வேண்டும் என்றால் மூன்றரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். இந்த பணத்தை கட்டிவிட்டால் 10ம் வகுப்பு வரை நம் பிள்ளைகள் அங்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக புக் பீஸ், யூனிபார்ம் பீஸ் மட்டும் செலுத்தினால் போதும்.

இந்த ஸ்கீம் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சேர்ந்த நிலையில் அதற்கு உரிய கணக்கு வேலம்மாள் குழுமம் காட்டவில்லை என்று சொல்கிறார்கள். இதனை அடுத்தே தற்போது ரெய்டு நடைபெற்று வருகிறது.