குருசாமி என்ற தகுதி எப்போது கிடைக்கிறது? ஐயப்ப பக்தர்களுக்கு அபூர்வ தகவல்கள்!

கார்த்திகை மாதம் துவங்கிவிட்டாலே, வண்ண வேட்டிகளை அணிந்து, கழுத்தில் துளசி மாலை அணிந்து, நெற்றியில் மணக்க மணக்க சந்தனத்தை இட்டுக் கொண்டு, ‘சுவாமி சரணம்’ எனும் வார்த்தையை, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு, பாட்டு, பஜனை, பூஜை என ஊரையே மகிழச் செய்துவிடுவார்கள் ஐயப்ப பக்தர்கள்.


அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.

சபரிமலைக்கு பதினெட்டு முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமியாக முடியும்.

இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பமார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடவில்லை என்றாலும் நாள்தோறும் ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும். கட்டு கட்டும் முறை : நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும்.

துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கற்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கற்பூர தீபம் : ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

ஐயப்பன் கோயிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மஹா ரூபாய நம

ஓம் க்ரூரத் ருஷ்டயே நம

ஓம் அனாமயாய நம

ஓம் த்ரிநேத்ராய நம

ஓம் உத்பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம

ஓம் நராதிபாய நம

ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம

ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம

ஓம் மதனாய நம.