கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களிலும் கடைசி மூன்று மாதங்களிலும் கர்ப்பிணிக்கு மனநல பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று பார்த்திருக்கிறோம். முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் கர்ப்பிணியின் மனநிலை பாதிப்பு அதிகரிக்கலாம்.


• சிகிச்சை எடுத்துக்கொள்ளாத கர்ப்பிணி, கடுமையாக கோபத்தை காட்டலாம். யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர் மூர்க்கமாக நடந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

• மிகவும் சுகாதாரமாக இருக்கிறேன் என்று அளவுக்கு மீறி கைகளை சோப்பு போட்டு கழுவுவது, ஆடைகளை மீண்டும் மீண்டும் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.

• மதரீதியிலான விரதம், சடங்குகளை அதிதீவிரமாக கடைபிடிப்பதும் கர்ப்ப காலத்தில் சிக்கலாகலாம். 

• ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்யும் பழக்கத்திற்கும் கர்ப்பிணி அடிமையாகலாம். மூன்று முறை பூட்டை இழுத்துப் பார்ப்பது, ஐந்து முறை அழுக்கை துடைப்பது போன்றவையும் மன நலக்குறைபாடாக அறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் சிக்கலாக வாய்ப்பு உண்டு என்பதால் மனநல மருத்துவரின் வழக்கமான ஆலோசனை சிகிச்சையும் மிகவும் அவசியம். எந்த காரணத்தைக் கொண்டும் கர்ப்பிணியை குறை சொல்வது, கடுஞ்சொல்லால் திட்டுவது பிரச்னையை மேலும் அதிகரிக்கலாம். கர்ப்பிணியின் மனநலம் குறித்த மேலும் சில முக்கிய செய்திகளை நாளை பார்க்கலாம்.