இந்த மூலிகை மருந்து மூலம் தான் கொரோனாவை எங்கள் நாட்டில் இருந்து விரட்டினோம்..! குடித்துக் காட்டி நிரூபித்த அதிபர்!

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக மடகாஸ்கர் நாட்டுப் பிரதமர் கூறியிருப்பது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,58,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 37,23,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது சோதனையில் உள்ளன. இந்நிலையில், மடகாஸ்கர் நாட்டில் இந்த வைரஸின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பிரதமர் ஆன்ட்ரே ரெஜோலினா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மடகாஸ்கர் தீவுகளில் கிடைக்கப்பெறும் "ஆர்டிமீசியா" என்ற தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த மருந்தானது அந்நாட்டில் மலேரியா நோயை அழிப்பதற்கு வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மருந்தானது இந்த நோயையும் அழிக்கும் திறன் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிட்டுள்ளார். மலகசி மருத்துவத்துறையினர் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகவும் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் அந்நாட்டு தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்த மருந்தை குடித்தும் காண்பித்தார்.

இருப்பினும் இந்த மருந்தை வைரஸ் தாக்குதலை தீர்க்கும் வல்லமை படைத்தது என்று உலக சுகாதார மையம் எந்தவிதமான தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது உலக மக்களை பெரிதளவில் வியக்க வைத்துள்ளது.