மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தமிழக ஆளுநருக்கு வீரமணி எச்சரிக்கை

ஒரு மாநில அரசு மசோதாவை நிறைவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கடைப்பிடிக்க வேண்டிய முறையான வழிமுறைகளை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விடயத்தில் தமிழக ஆளுநர் கடைப்பிடிக்கவில்லை - இதற்கு மூலகாரணம் மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடே! இவற்றையெல்லாம் மக்கள் மறந்துவிடுவர் என்று எண்ணவேண்டாம் என்று கி.வீரமணி எச்சரிக்கை செய்துள்ளார்


‘நீட்’ தேர்வினால், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து ‘நீட்’தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கிடைக்கும் இடம் ஒரு சதவிகிதம்கூட இல்லை என்ற கொடுமையான நிலையை சுட்டிக்காட்டி நாமும், பலரும் தொடர்ந்து எழுதிவரும் நிலையில், ‘நீட்’ தேர்வு எழுதும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தரும் வகையில் ஏற்பாடு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு.கலையரசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு - ஆராய்ந்து 10 சதவிகித இட ஒதுக்கீடு தரலாம் என்று பரிந்துரை செய்துள்ளதை அமைச்சரவை ஏற்ற நிலையில்,

அதையும் அப்படியே செயல்படுத்தத் தயங்கி (என்ன காரணத்தால்... புரியாத புதிர்?) வெறும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் ஒரு தனி சட்டம் கொண்டுவர, கடந்த செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதல் (Assent) பெற, முறைப்படி அனுப்பி ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதற்கு ஒப்புதல் தராமல் - ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டம் நெருங்கி விட்ட நிலையில், முதல்வரும், அமைச்சர்களும், பிறகு அய்ந்து அமைச்சர்களும் தனியே சந்தித்தும்கூட, வற்புறுத்தியும்கூட அம்மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் உள்ளார்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி, ஒரு மாநில ஆளுநர் அந்த மாநில அரசு மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு (Assent) அனுப்பி விட்ட பிறகு - அது நிதிபற்றிய மசோதாவாக (Money Bills) இல்லையென்றால், என்ன செய்யவேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 (Article 200) தெளிவாக விளக்குகிறது.

நான்கு வழிமுறைகள் ஆளுநருக்கு உண்டு.

1. ஒப்புதல் அளிப்பது

2. ஒப்புதலை மறுப்பது - நிறுத்துவது

3. குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்புதல்

4. அம்மசோதாவை தனது கருத்துரையுடன் மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்புவது

இதில் ஆழமாகப் பரிசீலித்து முடிவெடுக்க இத்துணை மாதங்கள் எடுத்துக் கொள்ள எந்த சட்டத் தேவையும் இல்லை. ஏற்கெனவே உள் ஒதுக்கீடு சமூகநீதியில் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வின் 5 நீதிபதிகளின் தீர்ப்புகள் வந்துள்ளன. தமிழக அரசு செய்த உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் தீர்ப்பு வெளிவந்துள்ளது ஆளுநருக்குப் போதிய சட்ட வெளிச்சத்தைத் தரக்கூடிய ஒன்று! தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்தும், ஆளுநர் நிலைப்பாடு கேளாக்காதாகவே தொடரும் அவலம்!

அரசமைப்புச் சட்டம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக மக்களாட்சி அரசின் மசோதா இப்படி ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடந்து, இப்படியா மாணவர் - பெற்றோருக்கு இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துவது? என்று கேட்டுள்ளார்.