மாங்கல்ய தோஷம் ஏன் ஏற்படுகிறது, அந்த தோஷத்தை விலக்கும் வழிகள் தெரியுமா?

இன்றைய காலத்தில் திருமணத்தடைகள் ஆண், பெண் என இருபாலருக்கும் பெரும் ஏமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.


ஜாதகத்தை வைத்து பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது எனப் பார்ப்போம். 

மாங்கல்ய தோஷம் : மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம்.

இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம் அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால் தோஷம் விலகும். 

சூரிய தோஷம் : ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,7,8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. 

செவ்வாய் தோஷம் : ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட அதேபோல் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும். 

புணர்ப்பு தோஷம் : இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான கிரகங்களான சந்திரன், சனி இணைவு புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ, சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. 

ராகு-கேது தோஷம் : ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னம் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12 வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும். 

களத்திர தோஷம் : களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் களத்திர தோஷம் என்கின்றனர்.