மகாராஷ்டிர மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியை சார்ந்த உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார்.


மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் ஆகிய இருவரும் நேற்றையதினம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் .

மேலும் அவர்கள் தங்களுக்கு 166 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினர். மேலும் அந்த 166 எம்எல்ஏக்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் ஒப்படைத்தனர்.

அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் , சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து சிவசேனா கட்சியை சார்ந்த உத்தவ் தாக்கரேவை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ள ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். 

முன்னதாக இந்த மூன்று கட்சி உறுப்பினர்களின் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு "மகா விகாஸ் அகாதி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி கட்சியில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் முன்னிலையில் பேசிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் 30 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை என்றும் 30 ஆண்டுகளாக எதிரணியில் இருந்தவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று பெருமிதம் கொண்டார். 

இதனை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யார், உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமிக்க உள்ளதாக கூறினார். மேலும் அவருக்கு நாளை மாலை 6:40 மணி அளவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாகவும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.