மசோதாவை கிழித்து தியாகியாக மாறினார் உதயநிதி ஸ்டாலின்! வீடியோவா பதிஞ்சு வைச்சுங்கோங்கப்பா! பின்னாடி கேட்பானுங்க!

திடீரென இன்று காலை சென்னையை ஸ்தம்பிக்கவைக்கும் அளவுக்கு ஒரு போராட்டத்தை உதயநிதியின் இளைஞர் அணி நடத்திக்காட்டி கைதாகியிருக்கிறார்.


ஆம், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பில் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் நடந்து போனார்.   

சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். மத்திய அரசையும், எடப்பாடி பழனிசாமியையும் எதிர்த்து கோஷம் எழுப்பினார்கள். அதன் பிறகு, மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்து எறிந்தார். இதையடுத்து இளைஞர் அணியினர் சாலை மறியலில் ஈடுபடவே, போலீஸார் களம் இறங்கி கைது செய்யத் தொடங்கினார்கள். உதயநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்தார்கள்.

எப்படியோ அரசியல் வரலாற்றில் கைது செய்யப்பட்டவர்கள் என்று பட்டியலில் உதயநிதி பெயர் வந்துவிட்டது. உடனே ரிலீஸ் செய்வதால், இந்த பெயர் நிலைக்குமோ, இல்லையோ இந்த காட்சிகளையாவது உதயநிதி பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான், எதிர்காலத்தில் மிசா கைது போல பிரச்னைகள் வராமல் இருக்கும்.