காரில் வந்து பணத்தை கொள்ளையடித்த குரங்கு! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சுங்கச்சாவடியில் காருக்குள் இருந்து வந்த ஒரு குரங்கு 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


கான்பூரில் உள்ள ஒரு சுங்கச் சாவடியில் ஊழியர் கவண்ட்டருக்குள் அமர்ந்திருக்க சற்று நேரில் ஒரு கார் மிக மெதுவாக வந்து நிற்கிறது. காருக்குள் இருந்து மனிதத் தலையை எதிர்பார்த்த சுங்கச்சாவடி ஊழியருக்கு அதிர்ச்சி. காருக்குள் இருந்து ஒரு குரங்குதான் வெளியே வந்தது. 

அந்தக் குரங்கின் அடுத்த கட்ட செய்கைகள் சுங்கச் சாவடி ஊழியரை மேலும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் ஆழ்த்த அதனைப் பயன்படுத்திக் கொண்ட குரங்கு சுங்கச் சாவடியில் இருந்து ஒரு பணக்கற்றையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது.

இந்தக் காட்சிகள் சுங்கச் சாவடியில் உள்ல சி.சி.டி.வி.காமிராவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குரங்குக்கு கொள்ளை அடிக்க பயிற்சி கொடுத்து யாரோ பின்னிருந்து  இயக்குவதாகக் கூறப்படுகிறது.