திருச்சி காங்., வேட்பாளர் யார்? திருநாவுக்கரசருடன் மல்லுகட்டும் குஷ்பு!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இரண்டாவது நாளாக விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.


இன்றைய தினம் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ ஆகியோர் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். 

அதேபோல், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட கராத்தே தியாகராஜன் விருப்ப மனு தாக்கல் செய்தார். மகிளா காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் அப்சரா ரெட்டி கரூர் மற்றும் ஆரணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். திருவள்ளூர் தொகுதிக்கு காங்கிரஸ் எஸ்.சி/எஸ்.டி., பிரிவு தலைவர் செல்வபெருந்தகை விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அதேபோல், கரூர் தொகுதிக்கு ஜோதிமணியும், கன்னியாகுமரி தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அவருடைய மகன் ராமச்சந்திரன் திருநாவுக்கரசருக்காக விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அதேபோல் திருச்சி தொகுதியில் குஷ்பூ போட்டியிட விருப்பம் தெரிவித்து சுமதி அன்பரசு மற்றும் மயிலை அசோக்குமார் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

நேற்றைய தினம் தேனி தொகுதிக்கு முன்னாள் எம்பி ஆருண், ஆரணி தொகுதிக்கு விஷ்ணு பிரசாத் அகியோர் விருப்பமனு தாக்கல் செய்தனர். இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போது திருநாவுக்கரசர் - குஷ்பு இடையே மோதல் வெடித்தது.

அதனை தொடர்ந்து திருநாவுக்கரசரை குஷ்புவும், குஷ்புவை திருநாவுக்கரசரும் மாறி மாறி விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் குஷ்புவும் - திரநாவுக்கரசரும் திருச்சி தொகுதிக்கு குறி வைத்திருப்பதால் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.