முதலில் குரூப் 2 பாஸ்..! இப்போது குரூப் 1ல் வெற்றி! அடுத்த டார்கெட் ஐஏஎஸ் தான்..! அவமானங்களை கடந்து நெகிழ வைத்த திருநங்கை ஸ்வப்னா!

திருநங்கைகள் முன்னேற்றத்திற்கு அவர்கள் மீது கருணையோ, அனுதாபமோ வேண்டாம், சக மனிதர்களைப்போல உரிமை வழங்கினாலேப் போதும் என குரூப் 1 சாதனையாளர் திருநங்கை ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டடம் அலங்காநல்லூரில் பிறந்த ஸ்வப்னா, பள்ளியில் படிப்பு முதலே ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்த ஸ்வப்னா, அதைப்பற்றி கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்திவந்தார். பி.ஏ பட்டம் பெற்ற பின் 2013-ல் டி.என்.பி.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்று தேர்வில் பங்கேற்றார்.

மீண்டும் 2018 குரூப்-2 தேர்வை எழுதி வெற்றி பெற்று வணிகவரித்துறை அலுவலர்ஆனார். எனினும் மீண்டும் தற்போது குரூப்-1 தேர்வு எழுதிய தரவரிசைப் பட்டியலில் 228-வது ரேங்க் எடுத்துள்ளார். இதனால் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது அதற்கு இணையான பதவியில் அமர திருநங்கை ஸ்வப்னாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து ஸ்வப்னா கூறியபோது, பெற்றோரின் ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம். அடுத்தது ஐ.ஏ.எஸ் ஆவதற்கு படிக்க ஆரம்பிப்பேன், கல்வி ஒன்றுதான் சமூகத்தில் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும். உங்கள் அனுதாபமோ, கருணையோ எனக்குத் தேவையில்லை. உங்களுடன் போட்டிபோடக்கூடிய சம உரிமையை வழங்கினாலே போதும்; வெற்றிபெற்றுக் காட்டுவேன் என்று கூறுகிறார்.