அரசனின் எலும்புகள் ஆமைகளாக மாறிய அதிசயம் நடைபெற்ற திருத்தலம் எதுவென தெரியுமா?

சாதாரணமாக வீட்டினுள்ளேயே ஆமைகளை விடக் கூடாது என்பார்கள் .அதுவே கோயிலுக்குள் என்றால் அது ஒரு அதிசய விஷயமே.


ஆந்திராவில் கூர்மம் என்ற தலத்தில் வித்தியாசமாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வேலியிட்ட சிறு இடத்தில் ஏராளமாக நட்சத்திர ஆமைகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு சாப்பிட இலைதழைகளை அங்குள்ள ஒருவர் கிள்ளிக் கிள்ளிப் போடுகின்றார். அதை ஆமைகள் சாப்பிடும் பொழுது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

மகாவிஷ்ணு இத்திருத்தலத்தில் கூர்ம அவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்திரமலை ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அசைந்து தொல்லை கொடுத்தது. இதனால் தேவேந்திரன் மகாவிஷ்ணுவை வேண்டினான். தேவேந்திரனுக்கு உதவுவதற்காக மகாவிஷ்ணு பிரம்மாண்டமான ஆமையாக உருவெடுத்து மந்திரமலையில் அடியில் சென்று அதைத் தாங்கினார். அந்த கூர்ம ரூபியான பகவானுக்கு இந்தியாவில் உள்ள ஒரே சிறப்பு தலம் இதுதான்.

இங்கே ஆமைகள் வளர்க்கப்படுவதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அந்தப் புராணத்தின்படி சுவேதா மஹிபதி என்ற அரசன் கூர்மாவதாரப் பெருமாள்மீது அதிக பக்தி உள்ளவன். அவனை எம்பெருமான் ஆசீர்வதித்திருந்தார். அரசன் இறந்ததும் அவரது எலும்புகளை அருகிலிருந்த சுவேத புஷ்கரணியில் போட்டவுடன் எலும்புகள் அனைத்தும் கூர்மங்களாக (ஆமைகளாக) மாறின. அதனால் இங்குள்ள புஷ்கரணி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அந்த புராண வரலாற்றை நினைவு கூர்ந்தே இங்கு ஆமைகள் வளர்க்கப்படுகின்றன.

இத்தலம் வந்து கூர்மாவதாரப் பெருமாளை வழிபடுவோருக்கு இல்லாமை, இயலாமை உள்ளிட்ட குறைகள் யாவும் நீக்கி நல்லன எல்லாம் கிட்டும் என்பது நம்பிக்கை.