இன்று சனி மகாப்பிரதோஷம்..சிவனுக்கு எந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாக கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.


ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று (21.03.2020) சனிப்பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பைத் தரும். மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனிப்பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்களை போன்று ஆயிரம் மடங்கு பலன்களை தரக்கூடியது ஆகும்.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சனிப்பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தியம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - வளம் உண்டாகும்.

தேன் - இனிய சாரீரம் கிட்டும்.

பழங்கள் - விளைச்சல் பெருகும்.

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்.

நெய் - முக்திப்பேறு கிட்டும்.

இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.

எண்ணெய் - சுகவாழ்வு.

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி சிவனின் அருளை பரிபூரணமாக பெறுவோம்..!!