திருமணத் தடை நீக்கும் முருகன் ஆலயம் இது! ஆறு வாரங்களில் அற்புதம் நிகழும்!

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது.


சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது.

அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது. 

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை! மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம். 

இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை. 

திருமணம் ஆக வேண்டிய பெண்கள் ஆறு வாரமும், வாரம் ஒரு நாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை வழிபட திருமணம் விரைவில் அமையப் பெறும். ஆறு வாரமும் வள்ளி மணவாள் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

வள்ளி மணவாளப் பெருமான் சந்நிதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும். பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சன்னதிகளுக்கும் அர்ச்சனி செய்து பழைய மாலையை கோவிலில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும். 

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.