மூணு நல்லவங்க ரிலீஸ்... அப்ப ஏழு பேர் யாருங்க?

கஜா புயல் சோகத்தில் இருந்து தமிழர்கள் மீளாத நேரத்தில், சந்தடியே இல்லாமல் மூன்று மாணவிகளை எரித்துக்கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கிறது தமிழக அரசு.


ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் அ.தி.மு.. குண்டர்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டார்கள்.

அதில் உச்சபட்சமாக, கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்ஸுக்குத் தீ வைத்தனர். அந்த தீயில் இருந்து வெளிவர முடியாமல், பஸ்ஸில் பயணித்த கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் அ.தி.மு..வை சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போதும் இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இவர்களின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.

இந்த நிலைமையில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1,500 கைதிகள் விடுதலை செய்யப்பட இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் இந்த மூன்று கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், அவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்கவே மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டது அ.தி.மு.. அரசு.

தமிழக அரசின் அழுத்தத்திற்கு மசிந்து, கவர்னர் மூவரின் விடுதலைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நன்னடத்தை அடிப்படையில் மூன்று மாணவிகளைக் கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்படுவது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமே கஜா புயல் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரும் குற்றவாளிகள் இல்லை என்று விசாரணை அதிகாரியே சொல்லியிருக்கும் நிலையில், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், கொலைகாரர்களை விடுதலை செய்திருக்கும் அரசை என்ன சொல்வது.

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரமாம்!