புரட்டாசி மாதம் மட்டும் அசைவு உணவுக்கு தடை ஏன் தெரியுமா? அறிவியல் கலந்த ஆன்மிக அற்புத தகவல்!

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.


எல்லா மாதங்களிலும் விரதமிருந்து கோவிலுக்கு சென்றாலும் அந்த மாதங்களில் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவதில்லை. ஆனால், புரட்டாசி மாதம் மட்டும் ஏன் அசைவ உணவை தவிர்த்து விடுகிறார்கள் தெரியுமா? 

ஜோதிடத்தில் ஆறாவது ராசியாக கன்னி ராசி உள்ளது. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி மாதமாகும். இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம் என்பதாகும். புதன் சைவத்திற்குரிய கிரகம் என்பதால் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.  

புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும். இவ்வளவு மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இம்மாதம் சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. 

இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை பாதிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.அதுமட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் ஆகியவை நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். அதனால் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும். 

இதை துளசி கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்குச் சென்று, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.  சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.