இந்தியாவின் முதல் ஜோதிர்லிங்கம் திருத்தலம்! யுதிஷ்டிரன் உருவாக்கிய அதிசயம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்வாடா பிரதேசத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம் இந்த ஔந்தா நாகநாத் ஆகும்.


ஔந்தா நாகநாத் எனும் ஆன்மீக திருத்தலம் இந்தியாவின் பனிரெண்டு புனிதமான ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைந்துள்ள ஐந்து ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. மஹாபாரத பாண்டவ சகோதரர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் வனவாச காலத்தின்போது இங்குள்ள ஜோதிர்லிங்கத்தை சிவனுக்காக உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த ஔந்தா நாகநாத் கோயில் சிவபெருமானுக்காகவே ஹேமந்த்பந்தி கோயிற்சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான 60000 சதுர அடி பரப்பளவில் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த கோயிலை சுற்றிலும் சிறு சிறு கோயில்கள் இதர ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் விதமாய் அமைக்கப்பட்டுள்ளன. தத்தாத்ரேயர், நீலகண்டேஷ்வரர், தசாவதாரம், வேதவியாசலிங்கம், மற்றும் கணபதி சிலை போன்ற அம்சங்களையும் இந்த கோயிலில் காணலாம்.

இந்த அற்புதமான ஆன்மிக ஸ்தலம் உங்களுள் இறை நம்பிக்கையை தூண்டி சாந்தத்தை அளிக்கும் சக்தியைக்கொண்டுள்ளது மட்டுமல்லாமல் தன் அற்புதமான வடிவமைப்பின் மூலம் உங்களை வரலாற்றுக்காலத்துக்கும் கொண்டு செல்கிறது.

கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் சுவர்களும், தூண்களும் மிக உறுதியுடன் காட்சியளிக்கின்றன. ஒரு வித்தியாசமான அம்சமாக இந்த கோயிலில் நந்தி சிலையானது எல்லா சிவன் கோயில் அமைப்பைகளைப் போல கோயிலின் முன்புறத்தில் இடம்பெறுவதற்கு பதிலாக பின்புறத்தில் தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஔந்தா ஸ்தலத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நந்தேட் எனும் சிறு கிராமத்தில் குரு கோவிந்த் சிங்கின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள ‘சச் கந்த் ஹுசூர் சாஹிப் குருத்வாரா' அமைந்துள்ளது. ஔந்தாவிற்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த ஸ்தலத்துக்கும் முடிந்தால் சென்று வரலாம்.