குழந்தை வரம் தரும் உச்சிஷ்ட கணபதி..! ஆசியாவிலே மிகப்பெரிய விநாயகர் கோயில் இதுதான்.

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி.


அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை கட்டித்தழுவி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்‘ என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை. கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள்.

விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது நம்பிக்கை. (சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை.  

இங்குள்ள விநாயகருக்கு பிஉச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், பிமூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார். பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி'' என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரது பெயரில் பிஸ்ரீ' என்பது லட்சுமியையும், பிநீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் பிவாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது. இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் பிஉச்சிஷ்ட விநாயகரை' வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும். இங்கு விநாயகருக்கு முதுகை காட்டி தோப்புக்கரணம் போடுவது வழக்கம். இங்குள்ள இறைவனை வணங்கினால் நற்குணமுள்ள குழந்தைகள் பிறக்கும் என்பது ஐதீகம்.

ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விஷேசமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.