திருமாலின் திருமார்பு தரிசனம்! செல்வம் தரும் திருத்தலம் இது!

மகாலட்சுமி வாழும் திருமாலின் திருமார்பு தரிசனத்தால், லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.


சங்கரமங்கலம் என்ற கிராமத்தில் வசித்த சங்கரமங்கலத்தம்மையார் என்ற பெண்மணி ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அங்கிருக்கும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபடுவார். மறுநாளான துவதாசி நாளில் அவர், அந்தக் கோவிலில் இருக்கும் துறவிகள் அனைவருக்கும் அன்னதானம் செய்து மகிழ்ச்சி அடைவார்.

அவர் கோவிலுக்குச் சென்று வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், அந்த அம்மையாரைக் கோவிலுக்குச் செல்லவிடாமல் தடுத்ததுடன், மறைவாக இருந்து கொண்டு, அவருக்குப் பல்வேறு துன்பங்களையும் கொடுத்து வந்தான். அதனால் வருத்தமடைந்த அந்த அம்மையார், தான் கோவிலுக்கு வந்து செல்லும் போது, கண்களுக்குத் தெரியாத அசுரன் ஒருவன் தனக்குக் கொடுக்கும் துன்பத்தைச் சொல்லி அதிலிருந்து தன்னைக் காக்கும்படி வேண்டி வந்தார்.

ஒரு நாள், அவர் அந்தக் காட்டு வழியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்த போது, திருமணமாகாத இளைஞன் ஒருவன், அசுரன் ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியாகிப் போனது. அங்கு அசுரனையும் காணவில்லை, அவனுடன் போரிட்ட இளைஞனையும் காணவில்லை.

அதன் பிறகுக் கோவிலுக்குச் சென்ற அம்மையார், கோவிலில் இருந்த இறைவனைப் பார்த்த போது, தான் வரும் வழியில் அசுரனுடன் போரிட்டுக் கொண்டிருந்த திருமணமாகாத இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தனக்குத் துன்பமளித்துக் கொண்டிருந்த அசுரனைத் தான் வழிபட்டு வந்த இறைவனே வந்து அழித்திருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ந்தார்.

அன்றிலிருந்து அந்தக் கோவிலில் இறைவன், திருமணமாகாத இளைஞராகவே காட்சியளிக்கிறார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது. கோவிலுக்குள்ளே பத்தடி உயர மேடை போன்ற அமைப்பின் மீது மூலவரான ஸ்ரீ வல்லபர் சுமார் 7 அடி உயரத்தில் அங்கவஸ்திரம் இல்லாத பரந்த மார்புடன் தனது நான்கு கரங்களில் வலது மேல் கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் சங்கையும் வலது கீழ் கரத்தில் தாமரையையும் ஏந்தி இடது கீழ் கரத்தை இடுப்பில் வைத்தபடி தேஜோமயமாக புன்னகைத்தபடி நின்றிருக்கிறார்.

பொதுவாக விஷ்ணுவை பட்டாடை, கழுத்துகொள்ளாத தங்க வெள்ளி ஆபரணங்கள் என பார்த்து பழக்கப்பட்ட நமக்கு வித்தியாசமாக வெள்ளை வேஷ்டி, துளசி மாலையுடன் காட்சியளிக்கும் இந்த பகவானின் திருக்கோலம் அதிசயம்தான். இந்தத் தலத்தில் ஸ்ரீவல்லபரின் முக தரிசனம் காண சற்று குனிந்து பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும்போது பகவானின் பாத தரிசனத்தை காண முடியாது. பாத தரிசனம் காண சிறிது எம்பிப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது முக தரிசனத்தை காண முடியாது. ஆனால் எப்படி பார்த்தாலும் திருவாழ்மார்பனின் மார்பு தரிசனம் கிடைக்கும். ஸ்ரீவல்லபரை ஸ்ரீலக்ஷ்மியுடன் காண்பதே சிறப்பு என்பதால் அதற்கேற்றது போல மூர்த்தத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள இறைவன் திருவாழ்மார்பன், கோலப்பிரான் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இறைவி செல்வத் திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் பிற கோவில்களைப் போன்று கருடன் இறைவனுக்கு எதிரில் இல்லாமல் 50 அடி உயரத்தில் இருக்கும் கல்தூண் ஒன்றில் பறக்கும் நிலையில் இருக்கிறார். இறைவனை வேண்டியவுடன், இக்கோவிலின் கல்தூணில் ஐம்பது அடி உயரத்தில் இருக்கும் கருடன், பக்தர்களின் வேண்டுகோளைச் செயல்படுத்த இறைவனை உடனடியாக ஏற்றிச் செல்லத் தயார் நிலையில் இருப்பதாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

இங்குள்ள இறைவன் திருமணமாகாத இளம் தோற்றத்தில் உள்ள தலம் என்பதால், இக்கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபட அனுமதியில்லை. இருப்பினும், கேரள நாட்காட்டியின்படி, தனுர் (மார்கழி) மாதம் திருவாதிரை நாளிலும், மேடம் (சித்திரை) விசு நாளிலும் இறைவனின் மார்பு தரிசனம் சிறப்புக்குரியதாகக் கருதப்படுவதால், இவ்விரு நாட்களில் மட்டும் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் 1967-ல் இந்தத் தடை முழுவதுமாக நீக்கப்பட்டது. தற்சமயம் கோயிலுக்கு ஆண் – பெண் அனைவரும் சென்று வழிபடுகிறார்கள்.

இத்தலத்தில் தனுர் (மார்கழி) திருவாதிரை நாளன்று நடைபெறும் விழாவைக் காணச் சிவபெருமான் இங்கு வந்து சென்றாராம். அன்றிலிருந்து இக்கோவிலில் திருநீறு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே இக்கோவிலில் கேரளாவுக்கே உரிய சந்தனத்துடன் விபூதியும் சேர்த்துத் தரப்படுகிறது..

கேரளத்து கோயில் கலையான் கதகளி பிறந்தது இத்தலத்தில்தான். பல நூறு வருடங்களாக ஸ்ரீவல்லபர் க்ஷேத்திரத்தில் இரவு வழிபாட்டில் இடம் பிடித்து வந்த களியும் கதையும் இணைந்த நாட்டிய நாடகமே கதகளி.

வாழைப்பழங்களில் ஒரு வகையைச் சேர்ந்தது பததி. இந்தப் பழத்தை மட்டுமே ஸ்ரீவல்லபருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். வேறு வகை வாழைப்பழங்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.