பூவுலகம் வந்த பொன்மகள் – ஒரு வைகுண்ட ஏகாதசியில் அர்த்தஜாம பூஜை வரை தரிசனம் தந்த நாகம்

கிருதயுகத்தில் பிரம்மாவும், துவாபரயுகத்தில் ரிஷிகளும், பிருகத்தச்சனும், கலியுகத்தில் சந்திரலேகை என்ற தேவதாசியும் தவமிருந்து இறைவனை பூஜித்த தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவாச்சி – சின்னியம்பாளையம்.


தற்பர மகரிஷி என்பவர் இத்தலத்திலேயே வசித்து இறைவனை வழிபட்டுள்ளார். தற்பரவனம், மதுவனம், தேவவனம், வியாக்ரபுரம் என்ற பெயர்களிலும் இத்தலம் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆதியில் சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்று இத்தலம் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு சமயம் திருமால் பாற்கடலில் சயனித்திருந்தபோது தங்களில் உயர்ந்தவர் யார் என்பதில் ஸ்ரீதேவி பூதேவி இருவர் இடையே போட்டி நிலவியது. ஸ்ரீதேவியின் தோழிகள் மற்றவர்களை காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். அவளே அதிர்ஷ்ட தேவதை, பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம் என்று புகழ்ந்தனர். பூமாதேவியின் தோழியர் உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவளைக் காக்க பெருமாள் வராகம் என்ற ஓர் அவதாரத்தையே எடுத்தார் என்றனர். இந்த வாதம் வளர்ந்து வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. இதனால் ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க பூலோகம் வந்து தவம் புரிந்தாள். அதை அறிந்ததும் திருமாலும் இங்கு வந்து ஸ்ரீதேவிக்கு காட்சி தந்து அவர்கள் பிரச்சனையை தீர்த்து சமாதானம் செய்து வைத்தார். திருமகள் அப்படி வந்து தங்கிய இத்தலம் திருவாச்சி எனப் பெயர் பெற்றது. அதேபோல் இங்கு அமர்ந்த திருமாலுக்கும் திருவாச்சியப்பன் என்றும் தெய்வீக வாசுதேவன் என்றும் பெயர்கள் உண்டு. பின்னர் திருவாச்சி -சின்னியம்பாளையம் என்ற பெயர் உண்டானது.

கொங்குச் சோழர்களும் பாண்டிய மன்னர்களும் அதற்குப் பிறகு விஜயநகரத்தாரும் பெருமாள் ஆலயத்தை புதுப்பித்த வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கிபி 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் கோவிலாகவும் தனிச் சிறப்போடு விளங்கி வந்திருக்கிறது.

சுமார் 1600 ஆண்டுகள் பழைமை மிக்க ஆலயம். ராஜகோபுரம் 25 அடி அகலம் 60 அடி உயரம் கொண்டது. முதல் மண்டபத்தில் சொர்க்க வாசலும், கருடாழ்வாரும், மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், மணவாளர், உடையவர், நர்த்தன கிருஷ்ணர், செல்வவிநாயகரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரியபெருமாள் சிலா ரூபமாக எழுந்தருள, அருகே அக்காலத்தில் சுயம்பு வடிவமாக வழிபடப்பட்ட ஆதி கரிய பெருமாளும் தரிசனம் தருகிறார்.

ஒரு சமயம் கரியபெருமாள் தனக்கு தாகம் ஏற்பட்ட பொழுது அதனை தீர்க்க ஆதிசேஷனை ஏவினார். அவர் பெருமாள் இருந்த இடத்திற்கு மேற்கில் பூமியை கொத்த அங்கிருந்து தண்ணீர் பொங்கி வந்தது. அதனை கொண்டு வந்து பெருமாளின் தாகம் தீர்த்தார் ஆதிசேஷன். அந்த இடமே அனந்தன் கிணறு என்று அழைக்கப்பட்டு இன்று ஆனந்தக் கிணறு என்ற பெயரில் ஆலய தீர்த்தமாக விளங்குகிறது. அதில் நீராடி பெருமாளை தரிசனம் செய்தால் நாகதோஷம் நீங்கும். மழலை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி அன்று நாகம் ஒன்று இங்குள்ள கருடபகவான் மீது அமர்ந்து தரிசனம் தந்தது. அதனை விரட்ட கோவில் நிர்வாகிகள் முற்பட்ட பொழுது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து நான் அர்த்த ஜாம பூஜை வரை அங்கே இருப்பேன் என்று கூற அதனை ஏற்று இரவு பால் வைத்து வழிபட்டு கோவில் கதவை சாத்திச் சென்றனர். மறுநாள் கோயிலை திறந்த பொழுது நாகத்தைக் காணவில்லை. அது உரித்துச் என்ற சட்டை மட்டுமே காணப்பட்டது.

கரியபெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். பங்குனியில் நடைபெறும் திருவிழாவிற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு இங்கே வந்து பெருமானின் அருள் பெற்றுச் செல்கிறார்கள். ஆலயத்தை வலம் வரும்பொழுது தனிச் சன்னதியில் அருளும் காரியசித்தி அனுமனைத் தரிசிக்கலாம். வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் பெரும் வரப்பிரசாதி இந்த அனுமன். அடுத்து ஆழ்வார்களும் தொடர்ந்து சக்கரத்தாழ்வாரும் அவருக்குப் பின்புறம் யோக நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.

ஜுரஹரதேவர் இங்கே வீற்றிருப்பது விசேஷமானது. இவரிடம் நோய் தீர்க்க வேண்டிக்கொண்டு புளி சேர்க்காமல் மிளகு உப்பு மற்றும் கடுகு போட்டு தாளித்த ரசம் படைக்கிறார்கள். மேலும் சப்தகன்னியர்கள், சூரியன், சனீஸ்வரன், விஷ்ணு துர்க்கை, கால பைரவரையும் தரிசிக்கலாம். கை, கால் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலபைரவரை வேண்டிக்கொண்டு விரைவில் குணம் பெறுகிறார்கள்.

செல்வ வளம் பெருக கரிய பெருமாளை பக்தர்கள் வழிபட்டுச் செல்கிறார்கள். இங்குள்ள கருடாழ்வாரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி, காலப்போக்கில் அவர்கள் மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர் எனப்படுகிறது. பங்குனி அல்லது சித்திரை மாத கடைசி வெள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் ஒரே சமயத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசித்து பரவசம் அடைகிறார்கள்