சிவபெருமானுக்கும் விநாயகனுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமைகள் தெரியுமா?

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் தேதி (ஆவணி 16ஆம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.  

கணபதி எனும் சொல்லில் 'க" என்பது ஞானத்தை குறிக்கிறது. 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்பது பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது. 

தந்தையைப் போல் பிள்ளை :தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர். 

சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர். 

சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் இருக்கும். 

இருவருக்கும் மூன்று கண்கள்தான். 

தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர். 

இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர். 

தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வார். 

இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர் (நடராஜர், நர்த்தன கணபதி). 

விநாயகர் வடிவ விளக்கம் : யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடங்கும். 

பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.