நோய் தீர்க்கும் முருகன் ஆலயத்தின் நீரூற்று! இந்த ஆலயத்தை தரிசனம் செய்து நோயில் இருந்து விடுபடுங்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்!’ என்பர். அப்படி, முருகவேள் அருள் புரியும் மலைக் கோயில்களுள் ஒன்று வேலூர்- ஸ்ரீதீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் ஆலயம்.


சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென் கரையில் புதுவசூர் எனும் கிராமத்தில் மலை மீது அமைந்திருக்கும் இந்த ஆலயம், வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்துக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலைவிலும், ரத்தினகிரி முருகன் ஆலயத்துக்கு மேற்கே 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா?’ என்று முருகப் பெருமான், அழகுத் தமிழில் ஒளவையிடம் சொல்லாடல் புரிந்த தலம் இது என்கிறார்கள். இதைப் பறைசாற்றும் விதமாக, இங்கு மூலவர் சந்நிதிக்கு எதிரே மிகப் பெரிய நாவல் மரம் ஒன்று அமைந்திருப்பதைக் காணலாம்.

சுமார் 500 ஆண்டுப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடும் கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும், புனிதக் கிணறு ஒன்றும் உள்ளன. இவற்றின் தீர்த்தம், நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தது.

கான்கிரீட் கட்டுமானத்தில் வரவேற்பு வாயில், மலையடிவாரத்தில் தீர்த்தகிரி மகா கணபதி திருக்கோயில், மலை மீது ஏறிச் செல்லச் சுமார் 415 படிக்கட்டுகளுடன் கூடிய நேர்த்தியான பாதை, தெப்போற்சவம் மற்றும் மழை நீர் சேகரிப்பு நோக்குடன் மலையடிவாரத்தில் தீர்த்தகிரி திருக்குளம் ஆகிய அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதை சோலார் சிஸ்டம் கூடிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

படிகள் ஏறிச் செல்லும்போது வழியில் நாகக் கோயில் ஒன்று உள்ளது. அதை தரிசித்து, மலை ஏறினால், மேலே கோயில் பிராகாரத்துக்கு எதிரே கன்னி கோயிலை தரிசிக்கலாம். கன்னி கோயிலில் கன்னிகைகள் மஞ்சள் அரைக்கப் பயன்படுத்திய கல்லை இன்றும் காணலாம்.

பக்தர்கள், இந்த இரு கோயில்களிலும் பயபக்தியோடு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும், மலை மீது முருகனின் திருப்பாதங்கள் பதிந்த இரு இடங்களையும் புனிதமாகப் போற்றுகிறார்கள். இந்த இடங்களில் மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

முகப்பு கோபுரம், சுற்றுப் பிராகாரம், நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் விமானம், எழில்மிகு கருவறை என அழகுடன் காட்சி தருகிறது தீர்த்தகிரி திருக்கோயில்.

கோயிலுக்குள் அன்னை விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விசுவநாதர், மகாவிஷ்ணு, அன்னபூரணி, சரஸ்வதி, மகாலட்சுமி, மகா துர்க்காதேவி, வாகனங்களுடன் கூடிய நவக் கிரகங்கள், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், வேங்கடேசப் பெருமாள், துவாரபாலகர்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

கருவறையில் தேவியருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இவர் மிக வரப்பிரசாதி என்கிறார்கள்.