எல்லா சுதந்திரங்களுக்கும் ஆப்பு வருகிறது. அருந்ததிராய் புத்தகம் நீக்கம்… பேராசிரியரின் கண்டனம்

நெல்லை பல்கலையில் அருந்ததிராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டது, பல்வேறு மட்டத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் மதுரை பேராசிரியர் பிரபாகரின் வேதனை பதிவு இது.


இன்று காலை அருந்ததிராயின் புத்தக நீக்க செய்தியால் நான் அதிர்ச்சி அடையவில்லை. இது முன்னமேயே தொடங்கிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த அன்பாதவனின் ‘மாட்டுக்கறி’ எனும் ஒரு கவிதை ‘அவர்களின்’ பார்வையில் பட்டுவிட்டது. அந்தக் கவிதை யாருடைய பரிந்துரையில் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதைப் புலனாய்ந்து எனக்கும் என்னுடைய துறையின் இன்னொரு நண்பருக்கும் தொடர் தொலைபேசி இம்சைகளைக் கொடுத்தனர். வாட்ஸ் அப்பிலும் என்னுடைய தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து இதை பொதுமக்கள் கேட்க வேண்டும் என்ற அறிவிப்பு வேறு. நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுத்து அந்தக் கவிதை நீக்கப்பட்டது. 

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் பகிரவேண்டும். இன்குலாப் எழுதிய கண்மணி ராஜம் என்றொரு கவிதை. மிகவெளிப்படையாக கலைஞரையும் இந்திராவையும் விமர்சிக்கும் கவிதை. கலைஞர் உயிரோடு ஆட்சியிலிருந்த காலத்தில் இருந்து பாடமாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. எந்த முனையிலிருந்தும் எவ்விதத் தலையீடும் இருந்ததில்லை. ஆனால் 5% வாக்கு பலம் கூட இல்லாதவர்கள் தமிழகத்தில் நம் மாணவர்களுக்கு என்ன சொல்லித்தரவேண்டும் என்று தீர்மானிக்கிற இடத்துக்கு வந்துவிட்டதை எளிதாகக் கடந்துசெல்லமுடியாது. கூடுதலாக சமூக ஊடகங்களையும் இணைய வெளிகளையும் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. 

மிச்சமிருக்கிற முகநூல், வாட்ஸப் புரட்சிகளும், யு டியூப் நையாண்டிகளும் முடிவுக்கு வந்துவிடும் நாட்கள் கூட தூரத்தில் இல்லை போலும்.