இறைவன் சிவபெருமானை லிங்க வடிவில் பூஜிப்பது ஏன்...? அருவுருவ வழிபாடு மேன்மைகள்

இறைவழிபாட்டில் உருவ வழிபாடு அருவ வழிபாடு அருவுருவ வழிபாடு என்று மூன்று வகை உண்டு.


உருவ வழிபாடு என்பது முழுமையான உருவத்தை வைத்து வழிபடுவது. உருவமின்றி அருவ வழிபாடு என்பது இறைவனை மனதில் மட்டும் தியானித்து ஒரே ஒரு விளக்கினை மட்டும் ஏற்றி வைத்து அந்த விளக்கொளியில் இறைவனை மானசீகமாக கண்டு வழிபடுவார்கள்.

இவ்வாறு உருவமும் இன்றி, அருவமும் இன்றி இடையில் உருவமும் அருவமும் இணைந்த ஒரு நிலையே அருஉருவ வழிபாடு என்பது. இந்த அருஉருவ வழிபாட்டில் முதன்மையானதே சிவலிங்க வழிபாடு. மனித வடிவில் இறைவனை உருவகப்படுத்தாமல், இறைசக்தியை ஒரு கல்லில் கொண்டு வந்து வழிபடுவது. இந்த சிவலிங்கம் என்பதற்குள் ஆயிரக்கணக்கான தத்துவங்கள் அடங்கியிருக்கிறது. அதில் முக்கியமானது சிருஷ்டி என்பது.

அதாவது ஆணும் பெண்ணும் இணையும்போது அங்கே சிருஷ்டி என்பது உருவாகிறது. ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே இந்த உலகமானது இயங்கும். சிவம் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கருத்தினை வெளிப்படுத்துவதே சிவலிங்க தத்துவத்தின் மையக் கருத்து ஆகும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடே சிவலிங்கம். இந்த சிவலிங்கத்திற்குள் இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளும் அடங்கிவிடுகிறது. அந்த சிவலிங்கத்தை வழிபடுவதால் உலகின் ஆதிமூலத்தையே, அதாவது ஆதார சக்தியையே வழிபடுவதற்கான பலன் வந்து சேரும் என்பதே லிங்க வழிபாட்டின் தாத்பர்யம் ஆகும்.